இந்தியாவில் மைக்ரோசாப்ட் ரூ.1.58 லட்சம் கோடி முதலீடு
இந்தியாவில் மைக்ரோசாப்ட் ரூ.1.58 லட்சம் கோடி முதலீடு
ADDED : டிச 10, 2025 01:48 AM

புதுடில்லி: இந்தியாவின் வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு துறையில், 1.58 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக, மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா தெரிவித்துள்ளார். இந்தியா வந்துள்ள இவர், டில்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்புக்குப் பின், மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் ஏ.ஐ., திட்டங்கள் மற்றும் வளர்ச்சி முன்னுரிமைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக தெரிவித்துள்ளது.
மேலும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த முதலீடு அடுத்த நான்கு ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும் என்றும்; இது நடப்பாண்டு துவக்கத்தில் அறிவிக்கப்பட்ட 26,955 கோடி ரூபாய் முதலீடு போக, கூடுதலானது எனவும் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் ஏ.ஐ., வாய்ப்புகள் குறித்து பிரதமர் மோடியுடன் விவாதித்தேன். நாட்டின் ஏ.ஐ., திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் 1.58 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய மைக்ரோசாப்ட் முடிவு செய்துள்ளது. இதுவே, ஆசியாவி ல் எங்களது மிகப்பெரிய முதலீடாகும் . ஏ.ஐ., உள்கட்டமைப்பு, திறன் மேம்பாடு மற்றும் உள்நாட்டிலேயே தரவு பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்க இந்த முதலீடு பயன்படுத்தப்படும்.
- சத்யா நாதெள்ளா
சி.இ.ஓ., மைக்ரோசாப்ட்
இந்தியாவின் ஏ.ஐ., திறன் மீது உலகமே நம்பிக்கை கொண்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மிகப்பெரிய முதலீடு நம் நாட்டில் மேற்கொள்ளப் படுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி புதிய கண்டு பிடிப்புகளை உருவாக்கி, உலக நலனுக்காக சிறந்த முறையில் பயன்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
- நரேந்திர மோடி
பிரதமர்

