தொழில் மனை வாங்க கடும் போட்டி; நேர்காணல் நடத்த 'சிட்கோ' முடிவு
தொழில் மனை வாங்க கடும் போட்டி; நேர்காணல் நடத்த 'சிட்கோ' முடிவு
UPDATED : ஆக 03, 2025 08:43 AM
ADDED : ஆக 03, 2025 01:08 AM

சென்னை: சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் 'சிட்கோ' தொழிற்பேட்டைகளில் மனைகள் வாங்க, தொழில் முனைவோரிடம் போட்டி ஏற்பட்டுள்ளது. மனைகளை வாங்குவதற்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு, வரும், 5ம் தேதி முதல் நேர்காணல் நடத்தப்பட்டு, ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
ஏற்கனவே உள்ள மற்றும் புதிய தொழிற்பேட்டைகளில் உள்ள, 1,520 மனைகளை ஒதுக்கீடு செய்யும் பணியில், சிட்கோ ஈடுபட்டுள்ளது. இதற்காக விருப்பம் உள்ளவர்களிடம், சமீபத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில், சென்னையை சுற்றியுள்ள மாவட்ட தொழிற்பேட்டைகளில், மனைகளை வாங்க கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தொழிற்பேட்டைகளில் உள்ள மனைகளை வாங்க, 400க்கும் மேற்பட்டோரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சிலர் இரண்டு, மூன்று மனைகளுக்கு விண்ணப்பம் செய்துள்ளனர். விண்ணப்பித்தவர்களுக்கு வரும், 5ம் தேதி முதல், 15ம் தேதி வரை, சென்னை சிட்கோ அலுவலகத்தில் நேர்காணல் நடத்தப்படும்.
என்ன தொழில் செய்கின்றனர்; என்ன தொழில் செய்ய உள்ளனர்; உண்மையில் தொழில் முனைவோர் தானா போன்ற விபரங்கள் சரிபார்க்கப்பட்டு, மனைகள் ஒதுக்கீடு செய்யப்படும். ஒரே மனைக்கு இருவர் அல்லது அதற்கு மேற்பட்டோர் விண்ணப்பம் செய்திருந்தால், குலுக்கல் முறையில் ஒதுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

