ஓய்வூதியதாரர்களுக்கு 'பென்ஷன் ஸ்லிப்' வங்கிகள் அனுப்புவது கட்டாயம்
ஓய்வூதியதாரர்களுக்கு 'பென்ஷன் ஸ்லிப்' வங்கிகள் அனுப்புவது கட்டாயம்
ADDED : டிச 02, 2025 12:50 AM

மா தாந்திர ஓய்வூதிய பட்டுவாடா சீட்டை ஒவ்வொரு ஓய்வூதியதாரருக்கும், மின்னஞ்சல், குறுஞ்செய்தி., வாட்ஸாப் ஆகிய வழிகளில் அனுப்ப வேண்டும் என்று வங்கி களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்த சீட்டில் ஓய்வூதிய தொகை, பிடித்தங்கள், திருத்தங்கள் மற்றும் நிலுவை தொகை போன்ற முக்கியமான நிதி விவரங்கள் இருப்பதால், நிதி திட்டமிடலுக்கு பயனுள்ளதாக இருப்பதால் தங்களுக்கு அது அவசியம் தேவை என்று ஓய்வூதியதாரர்கள் கூறுகின்றனர்.
ஆனால், தங்களுக்கு அந்த சீட்டு வரவில்லை என பலரும் புகார் அளித்துள்ளதாக மத்திய நிதியமைச்சகத்தின் செலவின துறை தெரிவித்து உள்ளது. இதன்காரணமாக, அனைத்து ஓய்வூதிய தாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் மாதாந்திர ஓய்வூதிய சீட்டை கட்டாயம் அனுப்ப வேண்டும் என வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
எனவே, ஓய்வூதியம் வரவு வைக்கப்பட்ட பிறகு, பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்; பணம் அனுப்பப்பட்டதற்கான சீட்டை மின்னஞ்சல், குறுஞ்செய்தி, வாட்ஸாப் போன்ற மின்னணு வழிகளை பயன்படுத்தி உரிய நேரத்தில் அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், ஓய்வூதிய சீட்டு, அனைத்து வயதினரும் எளிதில் படிக்கக்கூடிய, தெளிவான வடிவத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதிய விபரங்களை www.cpao.nic.in என்ற இணையதளத்தில் தாங்களே எளிதாக பதிவு செய்து கொள்ளலாம்.

