சந்தையின் பாதையை மாற்றியமைக்கும் உள்நாட்டு நிதி நிறுவனங்களின் முதலீடு
சந்தையின் பாதையை மாற்றியமைக்கும் உள்நாட்டு நிதி நிறுவனங்களின் முதலீடு
ADDED : நவ 14, 2025 12:30 AM

ந டப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், அன்னிய முதலீட்டாளர்கள் 80,000 கோடி ரூபாய் மதிப்பில், இந்தியாவின் மதிப்புமிக்க முதல் 10 நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்திருப்பது, புள்ளிவிபரங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக, 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, பெரிய நிறுவன பங்குகளில் அன்னிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்திருப்பது குறைந்து உள்ளது.
கடந்த ஓராண்டில் மட்டும் 30 பில்லியன் டாலர், அதாவது, 2.65 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் பங்குகளை விற்பனை செய்துஇருக்கின்றனர்.
இதனால், தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் அன்னிய முதலீட்டாளர்களின் பங்கு, செப்டம்பர் 30 வரை, 13 ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்ச அளவாக 16.71 சதவீதமாக சரிந்தது.
2015ம் ஆண்டில் அதிகளவாக 20.71 சதவீதம் அளவிற்கு முதலீடு செய்யப்பட்டிருந்தது.
இந்திய பங்குச் சந்தைகளின் பாதையை மாற்றியமைக்கும் விதமாக, உள்நாட்டு நிதி நிறுவனங்களின் முதலீடுகள் அதிகரித்துள்ளன. உள்நாட்டு மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் முதலீடு, 10.93 சதவீதம் என்ற சாதனை உச்சத்தை தொட்டிருக்கிறது.
இதற்கிடையில், ஆய்வு நிறுவனங்களும், தற்போது சந்தை குறித்து சாதகமான கணிப்புகளையே வெளியிட்டு வருகின்றன. சர்வதேச ஆய்வு நிறுவனமான 'கோல்டுமேன் சாக்ஸ்' இந்த ஆண்டு இறுதிக்குள், நிப்டி 29,000 புள்ளிகளை எட்டும் என கணித்துள்ளது.
கொள்கைகள் வளர்ச்சிக்கு ஆதரவாக இருப்பதாகவும், வருவாய் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அதேபோல, 'இந்திய பங்குச் சந்தைகளுக்கு மோசமான காலம் முடிந்துவிட்டது' என எச்.எஸ்.பி.சி.,யின் ஹெரால்ட் வான்டெர் லிண்டே அறிக்கை கூறுகிறது. வளரும் சந்தைகளில், இந்திய சந்தையில் பங்கு மதிப்பு குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளது.
சரிவு வரும்போதெல்லாம் வாங்குவதற்கு வாய்ப்பு என்று எம்.கே., தரகு நிறுவனத்தின் ஆய்வுகள் கூறுகின்றன.
அன்னிய முதலீட்டாளர்களின் முதலீடு என்பது மிக முக்கியமானது என்றாலும், இனி, அவை இந்திய பங்குச் சந்தைகளின் திசையை நிர்ணயிக்கப்போவதில்லை என்றும்; சந்தைகள் தற்சார்பை நோக்கி பயணிப்பதாகவும், 'பிரைம் டேட்டா பேஸ்' கூறியுள்ளது.
இரண்டாவது காலாண்டில், அன்னிய முதலீட்டாளர்கள் 80,000 கோடி ரூபாய் மதிப்பிலான முக்கிய 10 நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்தும் பெரிய பாதிப்பில்லை

