பெடரல் வங்கி முடிவுக்கு காத்திருக்கும் முதலீட்டாளர்கள்
பெடரல் வங்கி முடிவுக்கு காத்திருக்கும் முதலீட்டாளர்கள்
ADDED : டிச 09, 2025 04:19 AM

இ ந்திய பங்குச் சந்தைகள் சரிவு, மற்ற ஆசிய நாணயங்களின் பலவீனம் காரணமாக ரூபாய் மதிப்பு சற்று குறைந்தது. இருப்பினும், சந்தையில் பெரும் பதற்றம் இல்லை. பங்குதாரர்கள் அடுத்த உலகளாவிய அறிவிப்புகளுக்காக காத்திருக்கின்றனர்.
ரெப்போ விகிதம் குறைப்பு உள்ளிட்ட ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள், ரூபாய் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்கான நோக்கத்தை கொண்டுள்ளன.
பொதுவாக, பணப்புழக்கம் அதிகரித்தால் நாணயத்தின் மதிப்பு குறையும். ஆனால், இந்த நடவடிக்கையின் வாயிலாக, ரூபாயின் மதிப்பில் அதிக அழுத்தம் ஏற்பட்டால், டாலர்களை விற்பனை செய்ய ரிசர்வ் வங்கி தயாராக உள்ளது என்ற செய்தியையும் சந்தைக்கு அனுப்பியுள்ளது.
இதனால், ரூபாய் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
சந்தையின் கவனம் இப்போது, இன்றும், நாளையும் நடைபெறவுள்ள அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவை நோக்கித் திரும்பியுள்ளது. அடுத்த வாரம் வட்டி விகிதம் குறைக்கப்பட 90 சதவீதம் வாய்ப்பு இருப்பதாகச் சந்தைகள் எதிர்பார்க்கின்றன.
கெவின் ஹசெட், பெடரல் வங்கியின் அடுத்த தலைவராக பொறுப்பேற்றால், அதிக வட்டி விகித குறைப்புகள் இருக்கும். அதனால் டாலர் மதிப்பு பலவீனமடைந்து, வளரும் சந்தை நாணயங்களுக்கு ஆதரவு கிடைக்கும்.
குறுகிய காலத்தில், ரூபாய் மதிப்பு 89.20 - 90.30 என்ற வரம்பிற்குள் நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 89.20 - 89.50 என்பது ஒரு நம்பகமான ஆதரவு நிலையாகவும், 90.30 என்பது முக்கிய தடுப்பு நிலையாகவும் இருக்கக்கூடும்.

