ADDED : நவ 14, 2025 11:27 PM

உலகச் சந்தை சூழ்நிலை சாதகமாக இருந்தபோதும், வெள்ளிக்கிழமை ரூபாய் வலுப்பெற முடியவில்லை. அமெரிக்க டாலர் பலவீனமாக இருந்தாலும், உள்ளூர் காரணிகள் ரூபாய் மதிப்பு குறைய காரணமாகின.
கடந்த அக்டோபரில், இந்தியாவின் சில்லரை விலை பணவீக்கம் 0.25 சதவீதமாக குறைந்தது. உணவுப் பொருள் விலை குறைவே இதற்கு முக்கிய காரணம்.
இது வரவேற்கதக்கதுதான். ஆனால், வரும் டிசம்பரில் ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை வெளியீட்டின்போது கடன் வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளதால், ரூபாய் மீதான அழுத்தம் தொடர்கிறது.
இந்திய பொருளாதாரம் வரும் 2027ம் ஆண்டு வரை, 6.5 சதவீதம் வளர்ச்சி காணும் என, சர்வதேச தர ஆய்வு நிறுவனமான மூடிஸ் கணித்துள்ளது. அரசு முதலீடுகள் மற்றும் மக்கள் செலவு செய்வதும் வலுவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் 50 சதவீத வரி, சவாலாக இருந்தாலும், ஏற்றுமதியை இந்தியா பிற சந்தைகளுக்கு மாற்றி, சாதனை காட்டியிருக்கிறது என குறிப்பிட்டுள்ளது.
இது, வெளிநாட்டு முதலீட்டுக்கு ஆதரவாக இருந்து, நடுத்தர காலத்தில் ரூபாய்க்கு பலம் சேர்க்கும்.
அமெரிக்க அரசின் 40 நாட்கள் முடக்கம் முடிந்ததால், சந்தைகள் உற்சாகமடைந்தன. டாலர் மதிப்பு குறைந்ததால், ஈக்விட்டி, கமாடிட்டி, மற்றும் வளரும் நாடுகளின் கரன்சி வணிகத்திற்கு முதலீட்டாளர்கள் மாறியுள்ளனர். இதுவும், ரூபாய்க்கு ஆதரவை கொடுத்துள்ளது.
கணிப்பு: தற்போதைய சூழலில், ரூபாய் மதிப்பு 88.40ல் இருந்து 88.80 வரை வர்த்தகமாக வாய்ப்புள்ளது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடையும் பட்சத்தில் 88.80 முதல் 89.00 வரையிலான மதிப்பு தடுப்பு நிலையாக உள்ளது.
ரூபாய் மதிப்பு வலுப்பெற்றால், 87.70 முதல் 88 வரை மேல் நோக்கி உயர வாய்ப்பு உள்ளது.

