'அச்சா அச்சா என்கிறார்; எனக்கு ஒன்றும் புரியவில்லை' டில்லியில் அலுத்துக்கொண்ட அமைச்சர் துரைமுருகன்
'அச்சா அச்சா என்கிறார்; எனக்கு ஒன்றும் புரியவில்லை' டில்லியில் அலுத்துக்கொண்ட அமைச்சர் துரைமுருகன்
ADDED : ஜூலை 26, 2024 12:50 AM
''தமிழகத்தின் நதிநீர் பிரச்னைகளை மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை நேரில் சந்தித்து விளக்கியபோது, 'அச்சா... அச்சா' என்றுதான் சொல்கிறார். அவரது பதில் ஏதும் எங்களுக்கு புரியவில்லை,'' என, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
டில்லியில் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீலை, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் சந்தித்துப் பேசிய பின், நிருபர்களிடம் கூறியதாவது:
புதிய ஆட்சி அமைந்துள்ளதால், ஏற்கனவே இருந்தவர் மாற்றப்பட்டு புதிய அமைச்சர் வந்துள்ளார். இவர்கள் இந்த விவகாரத்துக்கு புதியவர்கள். நமக்கும் புதியவர்கள். அதனால் அறிமுகம் செய்து கொள்ள வேண்டும். மரியாதை நிமித்தமாக சந்திக்க வேண்டும். அதற்காக வந்தேன் என்றாலும், 'நான் துரைமுருகன்... நலம்... நீங்கள் நலமா' என்று கேட்பதைக்காட்டிலும், எங்களுடைய பிரச்னையை அவர்களிடம் கூற நினைத்தோம்.
காவிரி, கடல் ஆழம் கண்டவர் கூட தீர்வு காண முடியாத பிரச்னை. முல்லை பெரியாறு அணையும் பிரச்னை. இந்த பிரச்னைகளை தெளிவாக கூறினோம். எல்லாவற்றையும் அமைச்சர் கேட்டார். ஆனால், அவர் அளித்த பதில்தான் எங்களுக்கு எதுவும் புரியவில்லை.
'அச்சா அச்சா..' என்றுதான் பேசுகிறார். அருகிலிருந்த இணையமைச்சர் சோபண்ணாவும் ஹிந்தி. பீஹாரைச் சேர்ந்த மற்றொரு இணையமைச்சரும் ஹிந்தி. அப்புறம் எப்படி புரியும். எனக்கு சளி பிடித்து இருப்பதால், நமது செயலர்தான் அனைத்தையும் விளக்கி பேசிக் கொண்டிருந்தார். இருப்பினும், நான், 'கர்நாடகாவில் மழை பெய்ததால், இப்போதைக்கு பிரச்னை இல்லை. ஆனால் வரும் நாட்களில் தண்ணீர் கிடைப்பதில் பிரச்னை ஏற்பட்டால் வந்துவிடுவேன்' என்று மட்டும் கூறி வைத்தேன்.
நடுவர் மன்றம், சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பின்படி, ஒரு ஆண்டு கூட தண்ணீர் தமிழகத்துக்கு வரவில்லை என்றேன். இணையமைச்சர் சோமண்ணா மட்டும், 'உங்கள் நண்பர்தானே சித்தராமையா அவரிடம் கேட்கலாமே' என்றார். நானோ, 'தாயும் பிள்ளையுமாக இருந்தாலும் வாயும் வயிறும் வேறு அல்லவா' என்றேன்.
இந்த சந்திப்பில் பிரச்னைகளை நாங்கள் பேசினோம். அவர்களுக்கு எதுவும் புரியவில்லை. மற்றபடி, வந்தோம், சந்தித்து விட்டுச்செல்கிறோம். அவ்வளவுதான். மொத்தத்தில் சந்திப்பு திருப்திகரமாக இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது டில்லி நிருபர் -

