காங்., வேட்பாளர்களுக்கு நடிகர் சிவராஜ்குமார் பிரசாரம்
காங்., வேட்பாளர்களுக்கு நடிகர் சிவராஜ்குமார் பிரசாரம்
ADDED : மார் 22, 2024 05:46 AM

உடுப்பி: ''காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வேன்,'' என்று, நடிகர் சிவராஜ்குமார் அறிவித்து உள்ளார்.
கன்னட திரை உலகின் முன்னணி நடிகர் சிவராஜ்குமார். இவரது மனைவி கீதா. லோக்சபா தேர்தலில் ஷிவமொகா தொகுதி, காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். இத்தொகுதிக்கு உட்பட்ட, உடுப்பி மாவட்டம், பைந்துாரில் நேற்று பிரசாரம் செய்தார். கீதாவுடன் கணவர் சிவராஜ்குமாரும் சென்றார்.
அதன் பின்னர் பைந்துாரில் நடந்த, காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டத்தில் சிவராஜ்குமார் பேசியதாவது:
கடலோர பகுதி மக்களை அதிகம் நேசிக்கிறேன். இப்பகுதி மக்களுக்கும் என் மீது, தனி அன்பு உண்டு. ஒரு பெண் மனது வைத்தால், எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு, மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா தான் உதாரணம். எனது மனைவி கீதா சமூக சேவையில் ஈடுபடுபவர். மக்கள் கஷ்டம் பற்றி, அவருக்கு நன்றாக தெரியும்.
எம்.பி., ஆனால் மக்கள் பிரச்னைகளுக்கு, தொடர்ந்து குரல் கொடுப்பார். ஷிவமொகா என் மாமனார் ஊர். அவரது ஆசிர்வாதமும், மது பங்காரப்பாவின் ஆதரவும் கீதாவுக்கு கிடைக்கும். கொல்லுார் மூகாம்பிகை அம்மனும், எங்களுக்கு அருள்பாலிப்பார். கீதாவுக்கு மட்டுமின்றி காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைவரையும் ஆதரித்து பிரசாரம் செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

