ADDED : ஜூலை 25, 2024 10:59 PM
பெங்களூரு: எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோஷம், குழப்பத்துக்கு இடையே மேல்சபையில், கர்நாடக நிதி வினியோக மசோதா - 2024 உட்பட, பல மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
கர்நாடக மேல்சபை கூட்டம், நேற்று காலை துவங்கிய போது, 'மூடா' ஊழல் குறித்து விவாதிக்க அனுமதி அளிக்க வேண்டும் என, எதிர்க்கட்சிகளான பா.ஜ., - ம.ஜ.த., உறுப்பினர்கள், சபையில் தர்ணாவில் ஈடுபட்டனர். இதற்கிடையே மசோதாக்களை தாக்கல் செய்யும்படி, மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி உத்தரவிட்டார்.
சட்டசபை மசோதா
சட்டசபையில் அங்கீகாரம் பெற்ற, கர்நாடக நிதி வினியோக மசோதா - 2024ஐ, நிதித் துறை அமைச்சருமான, முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்து, அங்கீகரிக்கும்படி கோரினார்.
அதன்பின் சட்டத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல், சட்டசபையில் அங்கீகாரம் பெறப்பட்ட, கர்நாடக சட்டசபை மசோதா - 2024ஐ தாக்கல் செய்தார்.
இவ்விரு மசோதாக்கள் அங்கீகரிக்கப்பட்டதாக, மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி அறிவித்தார்.
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட், சட்டசபையில் அங்கீகரிக்கப்பட்ட கர்நாடக சினிமா மற்றும் கலாசாரம் தொடர்பான மசோதாவையும், சிறிய நீர்ப்பாசனத்துறை அமைச்சர் போசராஜு, தேர்தல் சம்பந்தப்பட்ட மசோதாவையும் தாக்கல் செய்து, அங்கீகாரம் பெற்றனர்.
பல தீர்மானங்கள்
சட்டசபை, மேல்சபையின் வெவ்வேறு கமிட்டிகளுக்கு, தேர்தல் நடத்துவதற்கு பதில், உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம்; ராஜிவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழக செனட், கர்நாடக மாற்றுத்திறனாளிகள் ஆலோசனை ஆணையத்துக்கு தேர்தல் நடத்தாமல், உறுப்பினர்கள் நியமிக்கும் அதிகாரம்; மேல்சபை விதிமுறைகள் கமிட்டிக்கு, எம்.எல்.ஏ.,க்களை நியமிக்கும் அதிகாரத்தை, சபை தலைவருக்கு வழங்கும் தீர்மானத்துக்கும் ஒப்புதல் கிடைத்தது.
அதன்பின் வெவ்வேறு விஷயங்கள் தொடர்பாக, அறிக்கைகளை தாக்கல் செய்யும்படி சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு, ஹொரட்டி உத்தரவிட்டார்.
உறுப்பினர் ராஜேந்திரா ராஜண்ணா, 2023 - 24ம் ஆண்டின் கர்நாடக சட்டசபை எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவுகள் நலம் கமிட்டியின், மூன்றாவது அறிக்கையை தாக்கல் செய்தார்.
சட்டசபை பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் மற்றும் சிறுபான்மையினர் நலன் கமிட்டி உறுப்பினர் அப்துல் ஜப்பார், 2023 - 24ம் ஆண்டின் கர்நாடக சட்டசபை பிற்படுத்தப்பட்ட பிரிவுகள், சிறுபான்மை நலம் கமிட்டியின், முதலாவது அறிக்கையை தாக்கல் செய்தார்.
அதன்பின் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகியோர் சில தீர்மானங்களை, மேல்சபையில் தாக்கல் செய்து, ஒப்புதல் பெற்றனர்.

