கோவா ஓடும் வாகன ஓட்டிகள் கார்வார் 'பங்க்'குகள் நஷ்டம்
கோவா ஓடும் வாகன ஓட்டிகள் கார்வார் 'பங்க்'குகள் நஷ்டம்
ADDED : ஜூலை 27, 2024 04:53 AM
உத்தரகன்னடா : அண்டை மாநிலமான கோவாவில், எரிபொருள் விலை குறைவாக இருப்பதால், வாகன உரிமையாளர்கள் அங்கு சென்று, பெட்ரோல், டீசல் வாங்குகின்றனர். இதனால், கார்வாரின் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் நஷ்டம் அடைந்துள்ளனர்.
கர்நாடகாவில் சில மாதங்களுக்கு முன், பெட்ரோல், டீசலுக்கான வரிகள் அதிகரித்தது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 104 ரூபாயாகவும், டீசல் விலை லிட்டருக்கு 90.57 ரூபாயாகவும் உள்ளது. இது வாகன உரிமையாளர்களுக்கு, சுமையை ஏற்படுத்துகிறது.
அண்டை மாநிலமான கோவாவில், பெட்ரோல் விலை 99 ரூபாயாகவும், டீசல் 88.07 ரூபாயாகவும் உள்ளது. கர்நாடகாவுடன் ஒப்பிட்டால், கோவாவில் எரிபொருளின் விலை குறைவாக உள்ளது. எனவே உத்தரகன்னடா, கார்வாரின் வாகன உரிமையாளர்கள் கோவாவுக்கு சென்று பெட்ரோல், டீசல் போடுகின்றனர்.
பணத்தை மிச்சப்படுத்தும் நோக்கில், கார்வாரில் இருந்து 15 கி.மீ., தொலைவில் உள்ள, கோவா எல்லைப்பகுதிக்கு சென்று, கேன்களில் மொத்தமாக வாங்கி வருகின்றனர். இரு சக்கர வாகன பயணியரும் கோவாவுக்கு சென்று பெட்ரோல், டீசல் நிரப்புகின்றனர்.
கோவா பெட்ரோல் பங்க்குகள், அதிக லாபம் அடைகின்றன. அதே நேரத்தில் கார்வார் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் பெரும் நஷ்டம் அடைகின்றனர்.
'ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியவில்லை' என, பங்க் உரிமையாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும்படி வலியுறுத்துகின்றனர்.

