நாகசந்திரா- - மாதவரா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்திற்கு தயார்
நாகசந்திரா- - மாதவரா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்திற்கு தயார்
ADDED : ஜூலை 11, 2024 04:39 AM

பெங்களூரு : பெங்களூரு நாகசந்திரா - -மாதவரா இடையில் 3.77 கி.மீ., தூரத்திற்கு, புதிதாக அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் பாதையில், சோதனை ஓட்டம் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன.
பெங்களூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தற்போது செல்லகட்டா- - ஒயிட்பீல்டு, நாகசந்திரா -- சில்க் இன்ஸ்டிடியூட் வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
நாகசந்திராவில் இருந்து மாதவரா வரை 3.77 கி.மீ., துாரத்திற்கு 298 கோடி ரூபாய் செலவில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி, 2017ல் துவங்கியது. தற்போது பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இப்பாதையில் மஞ்சுநாத்நகர், சிக்க பிதரகல்லு ரயில் நிலையங்கள் வருகின்றன.
அடுத்த வாரம் முதல் புதிய ரயில் பாதையில் சோதனை ஓட்டம் நடக்க உள்ளது. தொடர்ந்து 45 நாட்கள் நடக்கும் சோதனை ஓட்டத்தின்போது, தண்டவாளத்தின் தன்மை, சிக்னல் உள்பட பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதன் பின்னர், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சோதனை நடத்துவார். அவர் ஒப்புதல் அளித்த பின்னர், இந்தப் பாதையில் ரயிலை இயக்க தேதி நிர்ணிக்கப்படும். அனேகமாக வரும் நவம்பரில் இருந்து, புதிய பாதையில் ரயில் இயக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்த பாதையில் ரயில் இயக்கப்பட்டால் துமகூரு சாலையில் வாகன போக்குவரத்து நெரிசல் குறையும் என்று சொல்லப்படுகிறது.
துமகூரு உட்பட 18 மாவட்டங்களில் இருந்து பெங்களூருக்கு வருவோர், மாதவராவில் இறங்கி, அங்கிருந்து மெட்ரோ ரயில் மூலம், நகருக்குள் எளிதாக வர முடியும்.
நாகசந்திரா- - சில்க் இன்ஸ்டிடியூட் இடையில் இயங்கும் மெட்ரோ ரயில்.

