தர்ஷன் விரைவில் விடுதலையாக வேண்டுதல் மூகாம்பிகை கோவிலில் மனைவி ஹோமம்
தர்ஷன் விரைவில் விடுதலையாக வேண்டுதல் மூகாம்பிகை கோவிலில் மனைவி ஹோமம்
ADDED : ஜூலை 27, 2024 04:55 AM

உடுப்பி : சிறையில் இருந்து தர்ஷன் விடுதலையாக வேண்டி மனைவி விஜயலட்சுமி, கொல்லுார் மூகாம்பிகை கோவிலில் நேற்று சண்டிகா ஹோமம் நடத்தினார்.
கன்னட திரையுலகில், கொடி கட்டி பறந்தவர் நடிகர் தர்ஷன். 'மெஜஸ்டிக், கரியா, ராபர்ட், காட்டேரா, குருஷேத்ரா' உட்பட, பல வெற்றிப்படங்களை கொடுத்தவர்.
லட்சக்கணக்கான ரசிகர்களை வைத்துள்ளவர். புகழின் உச்சியில் இருந்த அவர், தற்போது சிறையில் காலம் தள்ளுகிறார்.
தனக்கு நெருங்கிய தோழி பவித்ரா கவுடாவுக்கு, ஆபாச எஸ்.எம்.எஸ்., அனுப்பினார் என்பதற்காக, சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி, 33, என்பவரை, தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து, சித்ரவதை செய்து கொன்ற வழக்கில் தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கோரிக்கை
தர்ஷனை சிறையில் இருந்து வெளியே கொண்டு வர, மனைவி விஜயலட்சுமி தீவிர முயற்சி செய்கிறார். துணை முதல்வர் சிவகுமாரை சந்தித்து பேசி, தன் கணவரை வெளியே கொண்டு வர, சட்டப்படி உதவும்படி கோரிக்கை வைத்தார். மேலும் சில அரசியல் தலைவர்களை சந்திக்க அவர் முடிவு செய்து உள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை கொல்லுார் மூகாம்பிகை கோவிலுக்கு சென்ற விஜயலட்சுமி, தர்ஷன் சிறையில் இருந்து வெளி வர வேண்டி, சண்டிகா ஹோமம் நடத்தினார்.
இந்த ஹோமத்தில் விஜயலட்சுமியின் தோழியர் சிலர் கலந்து கொண்டனர். ஹோமம் முடிந்ததும் மூகாம்பிகை அம்மனை தரிசனம் செய்துவிட்டு புறப்பட்டார். தர்ஷனுக்காக அவரது சகோதரர் தினகர், மைசூரு சாமுண்டீஸ்வரி கோவிலில் நேற்று தரிசனம் செய்தார்.
இதற்கிடையில், பரபரப்பான, ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்த தர்ஷன், சிறையில் நாட்களை தள்ள சிரமப்படுகிறார். சிறை உணவு ஒத்துக்கொள்ளவில்லை.
சந்திக்க வராதீர்கள்
வீட்டில் இருந்து உணவு வரவழைக்க, நீதிமன்றம் ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால், மன வருத்தத்தில் உள்ள அவர், அமைதியாகவே தென்படுகிறார்.
தர்ஷனை காண குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலக பிரமுகர்கள், ரசிகர்கள் வருகின்றனர். அனைவருக்கும் அனுமதி கிடைப்பது இல்லை. நண்பர்கள், விசுவாசிகள் தினமும் சிறைக்கு வந்து, மணிக்கணக்கில் காத்திருந்தும், அவரை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். தன் குடும்பத்தினரை மட்டுமே தர்ஷன் சந்திக்கிறார். மற்றவரை சந்திக்க விரும்புவது இல்லை.
'குடும்பத்தினரை தவிர, வேறு யாரும் என்னை சந்திக்க வராதீர்கள். என் மீது அன்புள்ளவர்களை, சிறையில் சந்திப்பது எனக்கு வருத்தம் அளிக்கிறது. என் ரசிகர்கள் கொந்தளிக்காமல், அமைதியுடன் இருங்கள்' என தர்ஷன் வேண்டுகோள் விடுத்துள்ளதாக, அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

