ADDED : பிப் 28, 2025 05:55 AM
பெங்களூரு ஜெயமஹால், பல்லாரி சாலை விரிவாக்க பணிக்காக மைசூரு மன்னர் குடும்பத்திற்கு சொந்தமான, அரண்மனை நிலத்தில் 15 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசு முடிவு செய்தது. ஆனால் 1994 ம் ஆண்டு சந்தை நிலவரப்படி 15 ஏக்கர் நிலத்திற்கு 3,400 கோடி ரூபாய் இழப்பீடாக தர வேண்டும் என்று, மன்னர் குடும்பம் கேட்டது. ஆனால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என்று கூறிய அரசு, வெறும் 49 கோடி ரூபாய் மட்டும் தருவதாக கூறியது.
இதனை எதிர்த்து மன்னர் குடும்பம் சார்பில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மன்னர் குடும்பம் கேட்கும் தொகையை வழங்க, கடந்த ஆண்டு டிசம்பர் 10 ம் தேதி உத்தரவிட்டனர். மனு மீதான விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது.
அவசர சட்டம்
கடந்த மாதம் 23 ம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில், அரண்மனை நிலத்தை பொது பயன்பாட்டிற்காக அரசு பயன்படுத்தும் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மனு மீது விசாரணை நடந்தது.
அரசு சார்பில் ஆஜரான வக்கீல்கள் கபில் சிபல், சசிகிரண் ஷெட்டி, ராஜிவ் தவான் ஆகியோர் வாதிடுகையில், 'மன்னர் குடும்பத்தினர் கேட்கும் 3,400 கோடி ரூபாய் பணத்தை கொடுத்தால், அரசிற்கு கடும் நிதி நெருக்கடி ஏற்படும். அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என்பதால், சாலையை விரிவாக்கும் திட்டத்தை அரசு கைவிட முடிவு செய்து உள்ளது. அரண்மனை நிலத்தை பொது பயன்பாட்டிற்கு பயன்படுத்த, அரசு அவசர சட்டம் கொண்டு வந்து உள்ளது. இந்த சட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்று வாதிட்டனர்.
நேரில் ஆஜர்
மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல்கள் கங்குலி, ராகேஷ் திவேதி, மாதவி திவான், கோபால் சங்கரநாராயண் வாதிடுகையில், 'அரசு அவசர சட்டம் கொண்டு வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நீதிமன்ற உத்தரவை மீறி உள்ளனர். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்' என்று கேட்டு கொண்டனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் சுந்தரேஷ், அரவிந்த் குமார் கூறுகையில், ' அரண்மனை நிலத்தை கையகப்படுத்தும் விவகாரத்தில், எங்கள் உத்தரவை அரசு பின்பற்ற வேண்டும். 3,400 கோடி ரூபாய் மதிப்புள்ள டி.டி.ஆர்., எனும் மாற்றத்தக்க மேம்பாட்டு உரிமைகள் சான்றிதழ்களை ஒரு வாரத்தில் நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்ய வேண்டும். அரசின் நிலைப்பாட்டில் ஒரே மாதிரியான தன்மை இல்லை. நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றி வருகின்றனர். அரசு செய்யும் தவறால் அதிகாரிகள் சிக்கி கொள்வர். அடுத்த விசாரணைக்கு மாநகராட்சி, பி.டி.ஏ., கமிஷனர்கள் நேரில் ஆஜராக வேண்டும்' என்றனர்.
மனு மீதான அடுத்த விசாரணையை மார்ச் 20 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர் - நமது நிருபர் -.

