பத்திரங்கள் முழு விபரங்களையும் வெளியிட்டது தேர்தல் கமிஷன்
பத்திரங்கள் முழு விபரங்களையும் வெளியிட்டது தேர்தல் கமிஷன்
ADDED : மார் 22, 2024 01:22 AM
புதுடில்லி தேர்தல் பத்திரங்கள் தொடர்பான முழு விபரங்களையும் தாக்கல் செய்துள்ளதாக, எஸ்.பி.ஐ., எனப்படும் பாரத ஸ்டேட் வங்கி, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அந்த தகவல்களை தேர்தல் கமிஷன், தன் இணையதளத்தில் நேற்று வெளியிட்டுள்ளது.
'கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் தேர்தல் பத்திரம் முறை செல்லாது' என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது.
மேலும், இது தொடர்பான அனைத்து தகவல்களையும், இதை செயல்படுத்தும் எஸ்.பி.ஐ., அளிக்க வேண்டும் என்றும், அதை, தேர்தல் கமிஷன் தன் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இதன்படி சில தகவல்களை தேர்தல் கமிஷன் வெளியிட்டிருந்தது.
ஆனால், தேர்தல் பத்திரங்களின் குறியீட்டு எண் உள்ளிட்ட முழு விபரங்களையும் தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதற்காக உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த காலக்கெடு நேற்று மாலையுடன் முடிந்தது.
இந்நிலையில், எஸ்.பி.ஐ., சார்பில், உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக, அதன் குறியீட்டு எண் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் தேர்தல் கமிஷனில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பத்திரங்கள் வாங்கியவர்கள் மற்றும் அவற்றை பணமாக்கிய அரசியல் கட்சிகளின் வங்கிக் கணக்கு எண் மற்றும் கே.ஒய்.சி., எனப்படும் சுய விபரங்கள், பாதுகாப்பு கருதி வெளியிடப்படவில்லை.
அவை இல்லாமலேயே பத்திரங்கள் யார் வாங்கியது? அவற்றை எந்தக் கட்சி பணமாக்கியது என்ற விபரங்களை தெரிந்து கொள்ள முடியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த தகவல்களை தேர்தல் கமிஷன், தன் இணையதளத்தில் நேற்று மாலை வெளியிட்டுள்ளது.

