'என்னை கைது செய்ய சதி நடக்கிறது' மே 7க்கு பின் சொல்வாராம் எத்னால்
'என்னை கைது செய்ய சதி நடக்கிறது' மே 7க்கு பின் சொல்வாராம் எத்னால்
ADDED : ஏப் 27, 2024 11:01 PM

யாத்கிர்: ''என் மீது அதிகமாக வழக்குகளை பதிவு செய்து, என்னை கைது செய்ய வேண்டும் என்பது, துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர் பிரியங்க் கார்கேவின் குறிக்கோள்,'' என, பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் குற்றஞ்சாட்டினார்.
யாத்கிரில் நேற்று அவர் கூறியதாவது:
யாத்கிர் ஷஹாபுராவில், பா.ஜ., வேட்பாளர் ராஜா அமரேஸ்வர நாயக்குக்கு ஆதரவாக நான் பேசினேன். உணர்வுகளை துாண்டும் வகையில் பேசியதாக, என் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதிகமான வழக்குகளை பதிவு செய்து, என்னை கைது செய்ய வேண்டும் என்பது, துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர் பிரியங்க் கார்கேவின் குறிக்கோள்.
பா.ஜ., வேட்பாளர்களுக்கு ஆதரவாக என்னை பிரசாரம் செய்யவிடாமல், மே 7 வரை சிறையில் வைக்க வேண்டும் என, சதி செய்கின்றனர். பா.ஜ.,வில் நேரடியாக சித்தராமையா, சிவகுமார், பிரியங்க் கார்கேவை நான் ஒருவனே 'டார்கெட்' செய்கிறேன். எனக்கெதிரான சதி குறித்து, மே 7க்கு பின் கூறுகிறேன்.
தலித்துகள், பிற்படுத்தப்பட்டோரை, காங்கிரஸ் ஏமாற்றி உள்ளது. அம்பேத்கர் வகுத்த அரசியலமைப்பில், சமூக மற்றும் கல்வி ரீதியில் பின் தங்கியவர்களுக்கு மட்டும், இட ஒதுக்கீடு உள்ளது. முஸ்லிம் சமுதாயத்தினருக்கு, இட ஒதுக்கீடு வழங்க முடியாது.
மத்தியில் பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்ட இட ஒதுக்கீட்டை நீக்கி, தலித்துகள், பிற்படுத்தப்பட்டோருக்கு பகிர்ந்தளிப்போம்.
ஷியாம் பித்ரோடா, ராஜிவ், ராகுலின் ஆலோசகர். நாட்டில் சொத்துகளை சர்வே செய்து, பூர்வீக சொத்துகளில் 55 சதவீதத்தை, அரசு வசப்படுத்தும். இந்த சொத்துகள் இல்லாதோருக்கு பகிர்ந்தளிக்க, சட்டம் கொண்டு வரப்படும் என, ராகுல் கூறியுள்ளார்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, தந்தையின் சொத்துகள், பிள்ளைகளுக்கு சேர வேண்டும் என்ற சம்பிரதாயம் உள்ளது. இந்த சம்பிரதாயத்தை முறியடிக்க, காங்கிரஸ் முயற்சிக்கிறது. இந்த கட்சிக்கு பாடம் கற்பிக்க வேண்டும்.
நாட்டில் ஹிந்துக்கள் கொலை செய்யப்படுகின்றனர். நேஹாவை பயாஸ் கொலை செய்தார். யாத்கிரில் பயாஸ் என்பவரால் கொலை நடந்துள்ளது; ஹிந்துக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

