ADDED : மார் 22, 2024 01:19 AM
புதுடில்லி:வடகிழக்கு டில்லியில் நேற்று முன்தினம் நள்ளிரவு இரண்டு மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில், 2 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார்.
வடகிழக்கு டில்லியின் கபீர் நகரில் இரண்டு அடுக்குமாடி கட்டடம் இருந்தது. இந்த கட்டடத்தின் தரைத்தளத்தில் ஜீன்ஸ் துணி வெட்டும் கடை செயல்பட்டு வந்தது.
நேற்று முன்தினம் நள்ளிரவு 2:10 மணி அளவில் இந்த கடையில் மூன்று பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென கட்டடம் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் மூவரும் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து தீயணைப்புப் படையினரும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இடிபாடுகளை அகற்றும் பணியில் தீயணைப்புப் படையினருடன் அப்பகுதி மக்களும் இணைந்து கொண்டனர்.
கவனமாக மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணியில் மூவரும் மீட்கப்பட்டனர். இதில் இருவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். படுகாயமடைந்த மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

