ADDED : ஏப் 27, 2024 11:10 PM
பெங்களூரு: லோக்சபா தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்த பின், இதுவரை ரொக்கம், தங்கநகைகள், வெள்ளி பொருட்கள் உட்பட, 443.80 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து, கர்நாடக தேர்தல் அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கை:
கர்நாடகாவில் லோக்சபா தேர்தல் அமலுக்கு வந்த பின், நேற்று (நேற்று முன் தினம்) வரை தினமும் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். ரொக்கம், தங்கநகைகள், வெள்ளி பொருட்கள் சிக்குகின்றன.
போலீஸ் அதிகாரிகள், கண்காணிப்பு குழுக்கள் 139.88 கோடி ரூபாய் ரொக்கம், மதுபானம், போதைப்பொருட்கள், தங்கம், வெள்ளி, பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கலால் துறையினர் 277.72 கோடி ரூபாய் ரொக்கம், மதுபானம், போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.
வர்த்தக வரித்துறையினர், 80.11 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி, பரிசு பொருட்களை வசப்படுத்தினர். நேற்று 10.42 கோடி ரூபாய் ரொக்கம், மதுபானம், தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தேர்தல் விதிமீறல் தொடர்பாக, 2,172 எப்.ஐ.ஆர்.,கள் பதிவு செய்யப்பட்டன. 1,916 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
எலஹங்காவில் வருமான வரித்துறையினர், 4.80 கோடி ரூபாயும், பறக்கும் படையினர் கோரமங்களாவில், 18 லட்சத்து 82 ஆயிரத்து 267 ரூபாயும், தங்கவயலின், பேத்தமங்களாவில், 47 லட்சத்து 56,000 ரூபாயும், சாம்ராஜ்பேட்டின் ராயல் சதுக்கம் சோதனைச்சாவடியில் தேர்தல் கண்காணிப்பு படையினர் 20 லட்சம் ரூபாயும் பறிமுதல் செய்தனர்.
மைசூரின், காளசித்தனஹுன்டியில் 81 லட்சத்து 90,900 ரூபாயும், குந்தாபுராவில் 43 லட்சத்து 34,128 ரூபாயும் கைப்பற்றினர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.

