மத்திய பட்ஜெட்டை கண்டித்து இளைஞர் காங்., போராட்டம்
மத்திய பட்ஜெட்டை கண்டித்து இளைஞர் காங்., போராட்டம்
ADDED : ஜூலை 26, 2024 10:28 PM

புதுடில்லி,:மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து, காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி சார்பில் டில்லி சாஸ்திரி பவன் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
போராட்டத்தில் பங்கேற்ற பலர், பிரதமர் நரேந்திர மோடியின் முகமூடியை அணிந்து நாற்காலியில் அமர்ந்திருந்தனர். மற்றவர்கள் அவரை தோளில் சுமந்தனர். மேலும், பட்ஜெட்டில் ஆந்திரா மற்றும் பீஹார் மாநிலங்களுக்கு மட்டும் அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதைக் குறிக்கும் வகையில் இரு மாநில முதல்வர் படங்களை ஒரு சூட்கேசில் வைத்துக் கொண்டு கோஷமிட்டனர்.
காங்., இளைஞர் அணி தலைவர் ஸ்ரீனிவாஸ் பேசியதாவது:
மத்திய அரசின் பட்ஜெட்டில் நாட்டின் 90 சதவீத மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த நாடும் பணவீக்கத்தால் அவதிப்படுகிறது. ஆனால் அதுகுறித்து நடவடிக்கையும் எடுக்கும் வகையில் பட்ஜெட் போடவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
மத்திய அரசின் 2024 - 2025ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 23ம் தேதி லோக்சபாவில் தாக்கல் செய்தார்.
மறுநாளில் இருந்து பார்லி.,யின் இரு சபைகளிலும் எதிர்க்கட்சிகள் பட்ஜெட்டை கண்டித்து கடும் அமளி செய்து வருகின்றன.

