ADDED : டிச 09, 2025 06:25 AM

பாலகாட்: மத்திய பிரதேசத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட நான்கு பெண்கள் உட்பட 10 நக்சல்கள், தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து, மாநில முதல்வர் மோகன் யாதவ் முன்னிலையில் சரணடைந்தனர். 2.36 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவித்து தேடப்பட்ட நிலையில், இவர்கள் திருந்தி வாழ உறுதியளித்தனர்.
சத்தீஸ்கர், தெலுங்கானா, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேச மாநிலங்களில் நக்சல் ஆதிக்கம் மிகுந்து காணப்படுகிறது. இதை ஒடுக்கும் வகையில் மத்திய - மாநில அரசுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
நாடு முழுதும் வரும் 2026ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நக்சல் இயக்கத்தை முற்றிலும் அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் பாலகாட் மாவட்டத்தில் உள்ள திண்டோரி, மண்ட்லா உள்ளிட்ட பகுதிகளில் மத்திய அரசால் தடைசெய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவோயி ஸ்ட் பிரிவைச் சேர்ந்த நான்கு பெண்கள் உட்பட 10 நக்சல்கள், நேற்று முன்தினம் முதல்வர் மோகன் யாதவ் முன்னிலையில், தங்கள் ஆயு தங்களை ஒப் படைத்து சரணடைந்தனர்.
பல்வேறு குற்றச்செயல்களில் தேடப்பட்ட இவர்களைப் பற்றி தகவல் அளிப்போருக்கு 2.36 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து ம.பி., முதல்வர் மோகன் யாதவ் கூறுகையில், “பாதுகாப்பு படையினரின் நடவடிக்கையால் பிரதமர் மோடி நிர்ணயித்த இலக்கை, அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் எட்டுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
''மத்திய பிரதேசத்தின் திண்டோரி, மண்ட்லா ஆகியவை நக்சல் இல்லா பகுதிகளாக மாறியுள்ளன. திருந்தி வாழும் நக்சல்களுக்கு, மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் 15 ஆண்டுகளுக்கு மறுவாழ்வு நலத்திட்டங்கள் வழங்கப்படும். மாறாக, தொடர்ந்து வன்முறை செயல்களில் ஈடுபடும் நக்சல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

