அமர்நாத் யாத்திரைக்காக புறப்பட்டது 2வது குழு; விசேஷ பாதுகாப்பு வசதிகளுடன் சிறப்பு ஏற்பாடுகள்
அமர்நாத் யாத்திரைக்காக புறப்பட்டது 2வது குழு; விசேஷ பாதுகாப்பு வசதிகளுடன் சிறப்பு ஏற்பாடுகள்
ADDED : ஜூலை 03, 2026 03:23 PM

புதுடில்லி: அமர்நாத் யாத்திரைக்காக 2வது குழு புறப்பட்டுச் சென்றுள்ளது. இந்த குழுவில் 3865 பேர் இடம்பெற்றுள்ளனர்.
இமயமலையில் 3880 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகைக்கோயிலில் இயற்கையான பனிலிங்கம் உருவாகும். இதை தரிசிக்க ஆண்டுதோறும் ஏராளமான யாத்ரீகர்கள் செல்வது வழக்கம்.
முதல் குழு 2 வாரங்கள் முன்பு அமர்நாத் புறப்பட்டுச் சென்றது. இந்த குழுவில் 4822 பேர் இருந்தனர். தெற்கு காஷ்மீரில் பஹல்காம் முகாம், மத்திய காஷ்மீரின் சோனாமார்க் பகுதியில் உள்ள பால்டால் முகாம் ஆகியவற்றில் இருந்து யாத்ரீகர்கள் ஒரே நேரத்தில் புறப்பட்டனர்.
இந் நிலையில் பகவதி நகர் முகாமில் இருந்து 2வது குழு அமர்நாத்திற்கு புறப்பட்டு உள்ளது. இந்த குழுவில் 3865 பேர் பயணம் செல்கின்றனர். பாதுகாப்பு படைவீரர்கள், ஆயுதப்படை வீரர்கள் மற்றும் 201 வாகனங்களின் அணிவகுப்புகளுக்கு மத்தியில் யாத்ரீகர்கள் புறப்பட்டுச் சென்றனர்.
யாத்ரீகர்களுக்கு ரேடியோ அதிர்வெண் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. இதில் ஜிபிஎஸ் வசதியுடன் கண்காணிக்கும் வசதி இருக்கிறது. இதன் மூலம் அவர்களின் நடமாட்டத்தை பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணிக்க முடியும்.
