ADDED : டிச 10, 2025 12:37 AM

சத்தர்பூர்: மத்திய பிரதேசத்தில் தாங்கள் பணிபுரிந்த ஹோட்டலில் உணவு சாப்பிட்ட ஊழியர்கள் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ம.பி.,யின் சத்தர்பூர் மாவட்டத்தின் கஜூராஹோவில் உள்ள ஹோட்டலில் பணியாற்றும் ஊழியர்கள், நேற்று முன்தினம் தாங்கள் சமைத்த உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ் கூட்டுடன் சேர்த்து உணவு அருந்தினர். சற்று நேரத்தில் வாந்தி மயக்கம் ஏற்பட்டு எட்டு பேரின் உடல் நலம் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, அவர்கள் சத்தர்பூர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள், உணவு ஒவ்வாமை காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
உடல்நிலை மோசமானதால், அவர்கள் மேல் சிகிச்சைக்காக குவாலியர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி குஷ்வாகா, கிரிஜா ரஜாக், ராம் ஸ்வரூப் குஷ்வாகா ஆகிய மூவர் உயிரிழந்தனர்; மேலும் ஐந்து பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இறந்த மூவர் குடும்பத்துக்கு தலா 20,000 ரூபாய் நிவாரணமாக மாநில அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையே போலீசார் வழக்குப்பதிவு செய்து உணவு மாதிரியை சேகரித்து ஆய்வு கூடத்துக்கு சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

