துஷ்பிரயோகம் செய்பவருக்கு பரிசு பா.ஜ., மீது ஆதிஷி பாய்ச்சல்
துஷ்பிரயோகம் செய்பவருக்கு பரிசு பா.ஜ., மீது ஆதிஷி பாய்ச்சல்
ADDED : ஜன 10, 2025 11:17 PM
புதுடில்லி:“என்னை எதிர்த்து கல்காஜி தொகுதியில் போட்டியிடும் ரமேஷ் பிதுரியை முதல்வர் வேட்பாளராக பா.ஜ., முன்னிறுத்துகிறது,” என, முதல்வர் ஆதிஷி சிங் கூறினார்.
தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே, டில்லி சட்டசபைத் தேர்தல் பிரசாரம் களைகட்டியது. தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து சூடு பிடித்துள்ளது.
இந்நிலையில், கல்காஜி தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளரும், முதல்வருமான ஆதிஷி சிங் கூறியதாவது:
கல்காஜியில் என்னை எதிர்த்துப் போட்டியிடும் ரமேஷ் பிதுரியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த பா.ஜ., முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பா.ஜ.,வில் மிகுந்த முறைகேடுகள் நிறைந்தவர் என்பதற்காக பிதுரிக்கு அக்கட்சியின் தலைமை இந்தப் பரிசை வழங்கியுள்ளது. ஆம் ஆத்மி தலைவர்களை துஷ்பிரயோகம் செய்து பேசியவர்தான் இந்த பிதுரி. சமீபத்தில் கூட, என் தந்தையைப் பற்றி அவதூறாக பேசினார். அதேபோல், காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா கன்னம் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். தொடர்ந்து இதேபோல துஷ்பிரயோகம் செய்து வருவதால், அவரையே முதல்வர் வேட்பாளராக்க பா.ஜ., தலைமை முடிவு செய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கல்காஜி தொகுதியில் முதல்வர் ஆதிஷி சிங் போட்டியிடும் நிலையில், பா.ஜ., வில் ரமேஷ் பிதுரி, காங்கிரசில் அல்கா லம்பா ஆகியோர் களம் இறக்கப்பட்டுள்ளனர்.

