வங்கி மோசடி புகாரில் அனில் அம்பானியின் மகனுக்கும் சிக்கல்; சிபிஐ வழக்குப் பதிவு
வங்கி மோசடி புகாரில் அனில் அம்பானியின் மகனுக்கும் சிக்கல்; சிபிஐ வழக்குப் பதிவு
ADDED : டிச 09, 2025 02:48 PM

புதுடில்லி: வங்கி மோசடி வழக்கில் அனில் அம்பானியின் மகன் ஜெய் அன்மோல் மீது சிபிஐ கிரிமினல் வழக்குப் பதிவு செய்துள்ளது.
நாட்டின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி, 66. இவருக்கு சொந்தமான, 'ராகாஸ்' நிறுவனங்களுக்கு, 'யெஸ்' வங்கி 3,000 கோடி ரூபாய் கடன் வழங்கியது. ஒரு நிறுவனத்தின் பெயரில் பெற்ற கடன், சட்டவிரோதமாக மற்ற நிறுவனங்களுக்கு மாற்றம் செய்ததாக அனில் அம்பானி மீது குற்றச்சாட்டு எழுந்தது.
விசாரணையில், அனில் அம்பானி, 17,000 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக இரண்டு வழக்கு களை சி.பி.ஐ., பதிவு செய்தது. சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது. அனில் அம்பானிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த வழக்கில், அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி நேரில் ஆஜராகி, அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்து இருந்தார். அதுமட்டுமின்றி, அனில அம்பானிக்கு சொந்தமான சொத்துக்களையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. தற்போது அனில் அம்பானியின் மகனுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஜெய் அன்மோல் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. அனில் அம்பானியின் மகன் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படுவது இதுவே முதல் முறை. சிபிஐக்கு அனுப்பப்பட்ட எழுத்துப்பூர்வ புகாரில், ஜெய் அன்மோல் அனில் அம்பானி, ரவீந்திர சுதால்கர் மற்றும் பலர் கடன் வழங்குதல் மற்றும் திருப்பிச் செலுத்துவதில் முறைகேடுகள் மூலம் நிதி இழப்பை ஏற்படுத்திய செயல்களில் ஈடுபட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விஷயத்தில் அனில் அம்பானி குழுமம் இன்னும் தங்களது கருத்தை அறிக்கையாக வெளியிடவில்லை.

