அயோத்தி கோவில் நன்கொடை முறைகேடு வழக்கு தீவிரமடைகிறது! அறக்கட்டளை முன்னாள் பொதுச்செயலரிடம் விசாரணை
அயோத்தி கோவில் நன்கொடை முறைகேடு வழக்கு தீவிரமடைகிறது! அறக்கட்டளை முன்னாள் பொதுச்செயலரிடம் விசாரணை
ADDED : ஜூலை 01, 2026 06:12 AM

லக்னோ: உத்தர பிரதேசத்தில், அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு வழக்கின் விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், கோவிலை நிர்வகிக்கும், ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் முன்னாள் பொதுச்செயலர் சம்பத் ராயிடம் இரண்டு மணி நேரத்துக்கும் மேல் போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். நன்கொடைகள் பெறப்படுவது, எண்ணப்படுவது மற்றும் வங்கிகளில் செலுத்தப்படுவது வரையிலான நடைமுறைகள் குறித்து அவரிடம் கேட்டறிந்தனர்.
உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அயோத்தியில், பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில், 2024ல், பக்தர்களின் தரிசனத்துக்காக திறக்கப்பட்டது. கோவிலை ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வகிக்கிறது.
கோவிலுக்கு பக்தர்கள் வழங்கிய நன்கொடைகளில் பெரிய அளவில் முறைகேடு நடந்ததாக, கடந்த மாதம் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. விவகாரம் பூதாகரமானதை அடுத்து, இது குறித்து விசாரிக்க, மூன்று பேர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை உ.பி., அரசு அமைத்தது.
ராஜினாமா
இந்த குழுவினர், அயோத்தி கோவில் ஊழியர்கள், அர்ச்சகர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி, முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் அறிக்கையை சமர்ப்பித்தனர்.
இதன் அடிப்படையில், கோவில் அறக்கட்டளையின் பொதுச்செயலராக இருந்த சம்பத் ராயின் நெருங்கிய உதவியாளரும், டிரைவருமான ராம்சங்கர் யாதவ் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து, தார்மிக பொறுப்பேற்று அறக்கட்டளையின் பொதுச் செயலர் பதவியை சம்பத் ராய் ராஜினாமா செய்தார். தொடர்ந்து, கைதானவர் களின் வீடுகளில் நடத்திய சோதனையில், 80 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
முரண்பாடு
இந்த விவகாரத்தில், 7 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருக்கலாம் என சந்தேகிக்கும் சிறப்பு புலனாய்வு குழுவினர், கண்காணிப்பு கேமரா காட்சிகள், வங்கி ஆவணங்கள் மற்றும் 150 பேரின் வாக்குமூலங்களை சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில், கோவில் அறக்கட்டளையின் முன்னாள் பொதுச்செயலர் சம்பத் ராயிடம் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக அயோத்தி போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். நன்கொடைகள் பெறப்படுவது, எண்ணப்படுவது, வங்கிகளில் பணம் செலுத்தப்படுவது வரையிலான நடைமுறைகள் குறித்து அவரிடம் போலீசார் கேட்டறிந்தனர்.
இதற்கிடையே, வைப்புத்தொகை மற்றும் வரவு வைக்கப்பட்ட தொகையில் முரண்பாடுகள் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்த, கோவிலின் வங்கிக் கணக்கை பராமரிக்கும், 'ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா' வங்கியின் அதிகாரிகளிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணை தீவிரமடைந்துள்ளதால், இதில் தொடர்புடையோர் விரைவில் கைதாவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
எந்த தொடர்பும் இல்லை!
நாட்டின் எந்த பகுதியிலும் கோவில்களை கட்டுவது அல்லது நிர்வகிப்பது விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் வேலை அல்ல. கோவில் நிர்வாகம் அறக்கட்டளையை சார்ந்தது. அங்கு நடப்பவை அனைத்துக்கும் அந்த அறக்கட்டளையே பொறுப்பு. இதில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பையோ அல்லது அரசையோ குறை கூறுவதை ஏற்க முடியாது. அயோத்தி நன்கொடை விவகாரத்தை பொறுத்தவரை, சம்பத் ராய் எடுத்த முடிவுகளுக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அந்த அறக்கட்டளையின் செயல்பாடுகளில் இருந்து நாங்கள் முற்றிலும் விலகி நிற்கிறோம்.
-அலோக் குமார், சர்வதேச தலைவர், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு
