தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/தமிழகத்தில் தாது மணல் தடை தொடரும்: ஐகோர்ட் உத்தரவை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

தமிழகத்தில் தாது மணல் தடை தொடரும்: ஐகோர்ட் உத்தரவை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

தமிழகத்தில் தாது மணல் தடை தொடரும்: ஐகோர்ட் உத்தரவை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

2


ADDED : ஜூலை 08, 2026 09:05 PM

Follow on GoogleFavourite on Google

2

ADDED : ஜூலை 08, 2026 09:05 PM


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- புது டில்லி நிருபர் -


திருநெல்வேலி மற்றும் துாத்துக்குடி மாவட்டங்களில், கடற்கரை தாது மணல் மற்றும் ஆற்று மணல் எடுப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தனியார் நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் கனிம மணல் எடுக்க, 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக அரசு தடை விதித்திருந்தது. இருப்பினும், இந்த உத்தரவை மீறி கனிமங்களை வெட்டி எடுத்தல், பதுக்குதல் மற்றும் கடத்துதல் போன்ற சட்டவிரோதச் செயல்கள் தொடர்ந்தன.

நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் நடந்த இந்த பிரம்மாண்ட தாது மணல் கொள்ளை தொடர்பாக, கடந்த 2025-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம், இந்த விவகாரத்தை, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டிருந்தது.

மேலும், அரசுக்கு ஏற்பட்ட பெருத்த இழப்பீடான, 5,832 கோடி ரூபாயைத் தனியார் நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கவும், அவர்களின் இருப்புகளைப் பறிமுதல் செய்யவும், நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதற்கு எதிராக தனியார் நிறுவனங்கள், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, 'தாது மணல் சுரங்க விவகாரத்தில், முன்னதாக விதிக்கப்பட்ட குத்தகை தடை தொடர்ந்து அமலில் இருக்கும்' என்று, நீதிபதிகள் தெரிவித்தனர்.

'உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் அமர்வு, அனைத்து உண்மைகளையும் முழுமையாக ஆய்வு செய்த பின்னரே, விரிவான உத்தரவைப் பிறப்பித்துள்ளது; அரசியலமைப்பின் 136-வது சட்ட விதிகளின் அடிப்படையில், இந்த வழக்கில் எவ்வித பிழையும் இல்லை' என கூறிய நீதிபதிகள், தனியார் நிறுவனத்தின் மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

அதே வேளையில், 'பொது மக்கள் தங்களின் பகுதிகளில் நடக்கும் சட்டவிரோத சுரங்கம் மற்றும் மணல் திருட்டு தொடர்பான புகார்களை, கனிம வளத்துறை, புவியியல் துறை அல்லது மாவட்டக் காவல் துறையினருக்கு உடனடியாகத் தெரிவிக்கலாம்' என்றும் உத்தரவில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us