ஷோபாவை தோற்கடிக்க கங்கணம் கட்டி அலையும் பா.ஜ., - எம்.எல்.ஏ.,
ஷோபாவை தோற்கடிக்க கங்கணம் கட்டி அலையும் பா.ஜ., - எம்.எல்.ஏ.,
ADDED : மார் 16, 2024 11:00 PM

பெங்களூரு: பெங்களூரு வடக்கு தொகுதியில் போட்டியிடும், மத்திய அமைச்சர் ஷோபாவை தோற்கடிக்க, பா.ஜ., - எம்.எல்.ஏ., சோமசேகர் கங்கணம் கட்டி அலைகிறார்.
பெங்களூரு யஷ்வந்த்பூர் பா.ஜ.,- எம்.எல்.ஏ., சோமசேகர். பா.ஜ., தலைவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், கட்சிக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.
ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு, ஓட்டு போட்டு அதிர்ச்சி அளித்தார். முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமாருடன் சேர்ந்து சுற்றுகிறார்.
இந்நிலையில் லோக்சபா தேர்தலில், பெங்களூரு வடக்கு தொகுதியில் போட்டியிடும், மத்திய இணை அமைச்சர் ஷோபாவை தோற்கடிக்க, சோமசேகர் கங்கணம் கட்டி கொண்டு சுற்றுகிறார்.
இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக, கோவிந்த்ராஜ்நகர் எம்.எல்.ஏ., பிரியா கிருஷ்ணா நிறுத்தப்படலாம் என்று, தகவல் வெளியாகி உள்ளது.
நேற்று முன்தினம் இரவு, பிரியா கிருஷ்ணாவின் தந்தையும், விஜயநகர் எம்.எல்.ஏ.,வுமான கிருஷ்ணப்பாவை, சோமசேகர் சந்தித்து பேசினார்.
'பெங்களூரு வடக்கு தொகுதியில் பிரியா கிருஷ்ணா போட்டியிட, அனுமதி கொடுங்கள். அவரை வெற்றி பெற வைக்க வேண்டியது, எனது பொறுப்பு' என்று கூறி உள்ளார்.
மத்திய அமைச்சர் ஷோபாவுக்கும், சோமசேகருக்கு ஆரம்பத்தில் இருந்தே ஆகாது. கடந்த 2008 சட்டசபை தேர்தலில், யஷ்வந்த்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட சோமசேகரை, ஷோபா தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.

