'ஸ்பீடு போஸ்டில்' கஞ்சா 'டெலிவரி; போதைப்பொருள் கடத்தல் கும்பல் சிக்கியது!
'ஸ்பீடு போஸ்டில்' கஞ்சா 'டெலிவரி; போதைப்பொருள் கடத்தல் கும்பல் சிக்கியது!
ADDED : ஜூலை 02, 2026 10:34 PM

ஹைதராபாத்: தபால் மற்றும் கூரியர் சேவைகளை பயன்படுத்தி நாடு முழுதும் கஞ்சா விற்பனை செய்து வந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலை ஹைதராபாத் போலீசார் கைது செய்தனர்.
தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் நடவடிக்கையாக, ஹைதராபாத் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, ஜார்கண்ட் மாநிலத்தின் இஸ்ரி பஜார் தபால் நிலையத்தில் இருந்து ஹைதராபாத்துக்கு அனுப்பப்பட்ட கஞ்சா பார்சலை போலீசார் கைப்பற்றினர். அதை பெற வந்தவரிடம் விசாரணை நடத்தியபோது, ஜார்கண்ட் மாநிலம் கிரிதிஹ் மாவட்டத்தைச் சேர்ந்த சத்யம் மிஸ்ரா தலைமையிலான கும்பல் நாடு முழுவதும் கஞ்சா விற்பனை செய்தது அம்பலமானது.
இந்த கும்பல் ஹைதராபாத், மும்பை, சென்னை, டில்லி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்கள் உட்பட 21 மாநிலங்களுக்கு கஞ்சா பார்சல் அனுப்பி வந்துள்ளது. தபால் அதிகாரிகளை ஏமாற்றுவதற்காக, அந்த பார்சல்களில் மருந்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
தினமும் 80 முதல் 100 ஆர்டர்கள் வரை பெற்று, அவற்றில் எட்டு முதல் 10 பார்சல்கள் வரை, 'ஸ்பீடு போஸ்ட்' மூலம் அனுப்பப்பட்டுள்ளன. ஒவ்வொரு பார்சலிலும் 50 முதல் 250 கிராம் வரை கஞ்சா இருந்ததாகவும், ஒரு நாளில் ஒரு லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இந்த விசாரணையில், ரயில் மற்றும் விமானம் வழியாக அனுப்பப்பட்ட தபால் பார்சல்கள் போதிய, 'ஸ்கேனிங்' சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக, ஹைதராபாதுக்கு விமானம் மூலம் வந்த பார்சல்களும் சோதனை செய்யப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
