ADDED : மார் 16, 2024 10:45 PM

விஜயபுரா: “அன்று அம்பேத்கரை அவமதித்த காங்கிரஸ், இன்று மல்லிகார்ஜுன கார்கேவை தன் வீட்டு வாசலை காவல் காக்க வைத்துள்ளது. தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, வேறு நோக்கங்களுக்கு பயன்படுத்துகின்றனர்,” என, பா.ஜ., செய்தி தொடர்பாளர் சலவாதி நாராயணசாமி கடுமையாக விமர்சித்தார்.
விஜயபுராவில் நேற்று அவர் கூறியதாவது:
தலித்துகளை பற்றி அதிகமாக பேசும் முதல்வர் சித்தராமையா, தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்ட 25,000 கோடி ரூபாயை, வேறு நோக்கங்களுக்கு பயன்படுத்தி உள்ளார். இதை எதிர்த்து குரல் எழுப்பாமல், தலித் அமைப்புகள் வாய் மூடி மவுனமாக உள்ளன.
காங்கிரஸ் அரசு வந்தவுடன், தலித் சங்கங்களின் குரலே அடங்கிவிட்டது. இந்த சங்கத்தினர் எங்குள்ளனர் என்பதே தெரியவில்லை. சமுதாயத்தினருக்கு ஒதுக்கப்பட்ட நிதி, வேறு நோக்கங்களுக்கு பயன்படுத்துவது தெரிந்தும், மவுனமாக இருப்பது ஏன்? இதற்கு அவர்களே பதிலளிக்க வேண்டும். இதற்கு முன்பு சித்தராமையாவிடம், எங்கள் சமுதாயத்தினரும், இரண்டரை ஆண்டு முதல்வராக வாய்ப்பளிக்கும்படி, நான் குரல் எழுப்பினேன். அப்போதே மஹாதேவப்பா, முதல்வர் பதவி காலியில்லை என, கூறியதன் மூலம் சித்தராமையாவை ஆதரித்தார்.
சித்தராமையா, மஹாதேவப்பா இடையிலான உறவில், விரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே தலித்துகளின் ஓட்டு வங்கியை தக்கவைத்துக்கொள்ள, இப்போது மஹாதேவப்பா குரல் எழுப்புகிறார். இவருக்கு தன்மானம் இருந்தால், தலித்துகளுக்கு ஏற்படும் அநியாயத்தை கண்டித்து, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த பின், கர்நாடகாவில் தலித்துகளை ஓட்டு வங்கியாக பயன்படுத்துகிறது. பசவலிங்கப்பா, ரங்கநாத், மல்லிகார்ஜுன கார்கே, பரமேஸ்வர், ராச்சையா போன்ற தலைவர்களுக்கு, முதல்வராகும் வாய்ப்பை காங்கிரஸ் வழங்கவில்லை.
'இண்டியா' கூட்டணியில், மல்லிகார்ஜுன கார்கேவை பிரதமர் வேட்பாளராக, மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி அறிவித்தபோது, எதிர்ப்புத் தெரிவித்தது சித்தராமையாதான். அன்று அம்பேத்கரை அவமதித்த காங்கிரஸ், இன்று கார்கேவை தன் வீட்டு வாசலை காவல் காக்க வைத்துள்ளது.
மஹாதேவப்பாவுக்கு தலித்துகள் குறித்து, அக்கறை இருந்தால், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையென்றால் சுயநலவாதி ஆகிவிடுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.

