''காங்கிரஸ் அழிகிறது; பாகிஸ்தான் அழுகிறது'': பிரதமர் மோடி விமர்சனம்
''காங்கிரஸ் அழிகிறது; பாகிஸ்தான் அழுகிறது'': பிரதமர் மோடி விமர்சனம்
ADDED : மே 02, 2024 12:40 PM

ஆமதாபாத்: ''பலவீனமடைந்துவரும் காங்கிரஸ் அழிந்து கொண்டிருக்கிறது, அங்கே பாகிஸ்தான் அழுகிறது. பாக்., தலைவர்கள் காங்கிரசுக்காக பிரார்த்தனை செய்கிறார்கள், அவர்கள் ராகுலை பிரதமராக்க துடிக்கின்றனர்'' என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: குஜராத்தில் நான் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். இந்த தேர்தலில் ஆனந்த் மற்றும் கெடா மாவட்ட மக்கள் எல்லா சாதனைகளையும் முறியடிப்பார்கள். 2014ல் என்னை நாட்டுக்கு சேவை செய்ய அனுப்பினீர்கள். குஜராத்தில் பணிபுரியும் போது, குஜராத்தின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சிக்கு என்று ஒரு மந்திரம் இருந்தது.
என் கனவு
நாட்டிற்கு என்ன நடந்தாலும் குஜராத் முன்னேற வேண்டும் என்று நாங்கள் சொன்னதில்லை. எனக்கு ஒரே ஒரு கனவு இருக்கிறது, 2047ல் நாம் சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது, இந்தியா 'வளர்ச்சியடைந்த பாரதம்' ஆக இருக்க வேண்டும் என்பதே எனது கனவு. இன்றைக்கு காங்கிரஸ் இந்தியாவில் பலவீனமடைந்து வருகிறது.
பாகிஸ்தான்
இதில் வேடிக்கை என்னவென்றால், இங்கு காங்கிரஸ் அழிந்து கொண்டிருக்கிறது, அங்கே பாகிஸ்தான் அழுகிறது. இப்போது பாகிஸ்தான் தலைவர்கள் காங்கிரசுக்காக பிரார்த்தனை செய்கிறார்கள். இளவரசரை (ராகுலை) பிரதமராக்க பாகிஸ்தான் துடிக்கிறது. பாகிஸ்தானின் ரசிகராக காங்கிரஸ் இருப்பது நமக்கு முன்பே தெரியும். பாகிஸ்தானுக்கும் காங்கிரசுக்கும் இடையிலான இந்த கூட்டு இப்போது முற்றிலும் அம்பலமாகியுள்ளது.
இண்டியா கூட்டணி
இண்டியா கூட்டணியைச் சேர்ந்த தலைவர் ஒருவர் தங்களின் வியூகத்தை நாட்டின் முன் அம்பலப்படுத்தியுள்ளார். அவர் முஸ்லிம்களை ஜிகாத்துக்காக ஓட்டளிக்குமாறு சொல்கிறார். அனைத்து முஸ்லிம்களும் ஒன்றுக்கூடி ஓட்டளிக்க வேண்டும் என்றும் இண்டியா கூட்டணி சொல்கிறது. ஜனநாயகத்தையும், அரசியல் சாசனத்தையும் அவமதித்து விட்டது.
ஒரு பக்கம் எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி மற்றும் பொதுப்பிரிவினரிடையே பிரிவினையை ஏற்படுத்துகின்றனர். மறுபக்கம் ஜிகாத்துக்காக ஓட்டளியுங்கள் எனக் கூறுகின்றனர். இது அவர்களின் நோக்கம் எவ்வளவு ஆபத்து என்பதை காட்டுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

