உலக நாடுகளுடன் ஒப்பிட்டால் இந்தியாவில் சமையல் காஸ் விலை குறைவு; தெளிவாக விளக்கிய மத்திய அரசு
உலக நாடுகளுடன் ஒப்பிட்டால் இந்தியாவில் சமையல் காஸ் விலை குறைவு; தெளிவாக விளக்கிய மத்திய அரசு
ADDED : ஜூன் 07, 2026 08:15 PM

புதுடில்லி: 'சர்வதேச சந்தையில் சமையல் காஸ் சிலிண்டர் விலை பிப்ரவரிக்கு பின், 46 சதவீதம் உயர்ந்த போதும், உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் நம் நாட்டில் காஸ் சிலிண்டர் விலை மிக குறைவாகவே உள்ளது' என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேற்கு ஆசியாவில் கடந்த பிப்ரவரியில் துவங்கிய ஈரான் மீதான போர் காரணமாக, சர்வதேச கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டது. இதையடுத்து உலகளவில் எரிபொருள் வினியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது 14.2 கிலோ சமையல் காஸ் சிலிண்டரின் விலை 29 ரூபாய் உயர்த்தப்பட்டது. மார்ச் 7ல், ஏற்கனவே 60 ரூபாய் உயர்த்தப்பட்டிருந்தது.
இது குறித்து, மத்திய பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: பெட்ரோலிய பொருட்களின் விலை சர்வதேச சந்தையுடன் தொடர்புடையது. ஒரு சிலிண்டர் இறக்குமதிக்கான அடக்க விலை, 1,600 ரூபாயை தாண்டியுள்ளது. எனினும், நுகர்வோருக்கான விலையை அரசு கட்டுக்குள் வைத்துள்ளது. சமையல் காஸ் சிலிண்டரின் விலை தற்போது, 942 ரூபாயாக உள்ளது.
'உஜ்வாலா' திட்டத்தில், 10.58 கோடி பயனாளிகளுக்கு, ஆண்டின் முதல் நான்கு சிலிண்டர்களுக்கான, 300 ரூபாய் மானியம் தொடர்வதால், அவர்கள் வெறும், 642 ரூபாய்க்கே சிலிண்டரை வாங்கிக் கொள்ளலாம். இதனால், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் சந்திக்கும் இழப்பை ஈடுகட்ட, 30,000 கோடி ரூபாய் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், இலங்கை போன்ற அண்டை நாடுகளை விடவும், அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற வளர்ந்த நாடுகளை விடவும் நம் நாட்டில் சமையல் காஸ் சிலிண்டரின் விலை குறைவு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
