பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த சி.ஆர்.பி.எப்., வீரர் கைது
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த சி.ஆர்.பி.எப்., வீரர் கைது
ADDED : மே 27, 2025 06:58 AM
புதுடில்லி : நம் நாட்டில் இருந்தபடி, அண்டை நாடான பாகிஸ்தானிற்கு உளவு பார்த்தவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
கடந்த இரண்டு வாரங்களில் மட்டும், பஞ்சாப், ஹரியானா, குஜராத், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட 13க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், டில்லியில் மோதி ராம் ஜாட் என்ற சி.ஆர்.பி.எப்., வீரரும் இந்த புகாரில் என்.ஐ.ஏ., அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2023 முதல் தேசிய பாதுகாப்பு தொடர்பான ரகசிய தகவல்களை, அவர் பாக்., உளவுத்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்காக மோதி ராம் ஜாட், பாக்., அதிகாரிகளிடமிருந்து பணம் பெற்றதும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து அவரை என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். மோதி ராமிடம் தொடர்பில் இருந்தவர்கள், அவரது மொபைல் போனில் உள்ள விபரங்கள் உள்ளிட்டவை குறித்து என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில், ராஜஸ்தானின் டீக் மாவட்டத்தைச் சேர்ந்த காசிம் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையின் போது, பாகிஸ்தானில் உள்ள சிலருடன் தொலைபேசியில் காசிம் பேசியதாகவும், அந்நாட்டிற்கு சென்றிருந்ததாகவும் கூறப்படுகிறது.

