முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு
ADDED : டிச 07, 2025 12:19 PM

காந்திநகர்: குஜராத்தில் அரசு நிலத்தை பயணிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு ஒதுக்கீடு செய்தது தொடர்பான வழக்கில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் சர்மாவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான பிரதீப் சர்மா, தன்னுடைய பதவி காலத்தில், மாவட்ட நில விலை நிர்ணயக் குழுவின் தலைவராக இருந்தபோது, வெல்ஸ்பன் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு ஒரு பெரிய அரசு நிலத்தை விதிமுறைகளை மீறி குறைந்த விலைக்கு வழங்கியுள்ளார்.
இதற்காக, அமெரிக்காவில் வசிக்கும் தனது மனைவியின் வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி, வெல்ஸ்பன் இந்தியா மற்றும் அதன் குழு நிறுவனங்களிடம் இருந்து பணத்தை பெற்றதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளளது. இந்தப் பணத்தை பயன்படுத்தி வீட்டுக்கடனை அடைத்ததாகவும், விவசாய நிலம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், பணம் பெற்ற நிறுவனத்திடம் இருந்து சிம்கார்டையும் வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார். மேலும், மோசடி பணத்தை பெறும் வகையில், 2004 முதல் 2007 வரை பிரதீப் சர்மாவின் மனைவி, வேல்யூ பேக்கேஜிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் 30 சதவீதம் பங்குதாரராக ஆக்கப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 2004ம் ஆண்டு குட்ச் மாவட்ட கலெக்டராக பணியாற்றிய போது, நிறுவனம் ஒன்றுக்கு அரசின் நிலத்தை குறைந்த விலையில் ஒதுக்கீடு செய்ததன் மூலம், பணபலன் அடைந்துள்ளார். இது தொடர்பான வழக்கில் நேற்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பை அளித்துள்ளது. ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் சர்மாவுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இவரிடம் இருந்து அமலாக்கத்துறை பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை மத்திய அரசு பறிமுதல் செய்ததாக கருதப்படும் என்று ஆணையிடப்பட்டது.

