பெங்., மாநகராட்சியில் பெஞ்ச் தேய்க்கும் சொத்து குவிப்பு அதிகாரியின் குடும்பத்தினர்
பெங்., மாநகராட்சியில் பெஞ்ச் தேய்க்கும் சொத்து குவிப்பு அதிகாரியின் குடும்பத்தினர்
ADDED : பிப் 03, 2025 04:51 AM
பெங்களூரு; சொத்து குவிப்பு குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள, பெங்களூரு மாநகராட்சியின் ஹெப்பால் துணை மண்டல உதவி செயல் நிர்வாக பொறியாளர் மாதவ் ராவ் குடும்பத்தின் அனைவரும், மாநகராட்சியில் பணிபுரிகின்றனர்.
பெங்களூரு மாநகராட்சியின் ஹெப்பால் துணை மண்டலத்தில், உதவி செயல் நிர்வாக பொறியாளராக பணியாற்றுபவர் மாதவ் ராவ். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக, குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த சில நாட்களுக்கு முன், இவரது வீட்டில், லோக் ஆயுக்தா சோதனை நடந்தது. ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்ததில், இவர் சட்டவிரோதமாக சொத்து குவித்தது தெரிந்தது.
இவரிடம் விசாரித்த போது, உடன் பிறந்தவர்கள் அனைவருமே மாநகராட்சியில் பணியாற்றுவதும் தெரியவந்தது. மாதவ் ராவுக்கு, ஒரு சகோதரியும், நான்கு சகோதரர்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் மாநகராட்சியின், வெவ்வேறு பிரிவுகளில் பணியாற்றுகின்றனர். அரசின் வேறு துறைகளில் பணியாற்றிய இவர்கள், தற்காலிகமாக பெங்களூரு மாநகராட்சிக்கு அயல் பணியாக நியமிக்கப்பட்டவர்கள்.
நிர்ணயித்த காலம் முடிந்தும், சொந்த துறைக்கு செல்லாமல், பல ஆண்டுகளாக மாநகராட்சியிலேயே கூடாரம் போட்டிருப்பது, லோக் ஆயுக்தாவினர் சோதனையில் வெளிச்சத்துக்கு வந்தது.
கடந்த 2010ல் அரசு பணியில் அமர்ந்த மாதவ் ராவ், 14 ஆண்டுகளிலேயே கோடிக்கணக்கான ரூபாய் சொத்துகளை சேர்த்துள்ளார். 8.57 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் வைத்திருப்பது தெரிந்தது. வீட்டுமனை, வீடுகள், நிலம் ஆவணங்களை ஆய்வு செய்த போது, 7.52 கோடி ரூபாய் அசையா சொத்துகள் உள்ளன. மேம்போக்காக பார்க்கும் போது, சட்டவிரோதமாக சம்பாதித்தது தெரிய வந்தது.
பெங்களூரு மட்டுமின்றி, பீதர் மாவட்டத்திலும், சொத்துகள் வைத்துள்ளார். லோக் ஆயுக்தாவினர் ஆவணங்களை தொடர்ந்து ஆய்வு செய்கின்றனர். மேலும் பல முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

