அரசு பங்களா ஆக்கிரமிப்பு; நோட்டீஸ் கொடுத்தும் காலி செய்யாத காங்கிரஸ்: ஆர்டிஐயில் தகவல்
அரசு பங்களா ஆக்கிரமிப்பு; நோட்டீஸ் கொடுத்தும் காலி செய்யாத காங்கிரஸ்: ஆர்டிஐயில் தகவல்
ADDED : ஜூலை 08, 2026 07:58 PM

புதுடில்லி: டில்லி அக்பர் சாலையில் இருந்த தலைமை அலுவலகத்தை 2013 ம் ஆண்டு முதல் காங்கிரஸ் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து இருந்தது என தகவல் அறியும் சட்டத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டில்லி அக்பர் சாலையில் 24 எண் பங்களாவில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் கடந்த 1977ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது.கடந்த ஆண்டு ஜனவரி மாதம் டில்லி கோட்லா சாலையில் இந்திரா பவன் என்ற பெயரில் புதிய தலைமை அலுவலகத்தை சோனியா திறந்து வைத்திருந்தார். இந்த அலுவலகத்தை காலி செய்ய கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்நிலையில் பழைய அலுவலகம் தொடர்பாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்தின் கீழ் செயல்படும் எஸ்டேட்ஸ் இயக்குநரகம் அனுப்பிய பதிலில் கூறப்பட்டுள்ளதாவது: 24 அக்பர் சாலையில் அமைந்துள்ள பங்களா, காங்கிரஸ் கட்சிக்கு 1992 ம் ஆண்டு ஆகஸ்ட் 7 ம் தேதி ஒதுக்கப்பட்டது. இருப்பினும், 2013 ஜூன் 26 ல் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. ஆனால் அந்த பங்களாவை காங்கிரஸ் கட்சி சட்டவிரோதமாக ஆக்கிரமித்து இருந்தது.2013 ஜூன் 26க்கு பிறகு அக்கட்டடத்தில் செயல்பட்டதற்காக காங்கிரஸ் கட்சி வாடகை ஏதும் கொடுக்கவில்லை.
இதுவரை கொடுக்க வேண்டிய வாடகை எவ்வளவு என்பதை அரசு இன்னும் முடிவு செய்யவில்லை எனத் தெரிவித்துள்ளது.
