எல்லைப் பகுதிகளின் வளர்ச்சிக்கு அரசு பாடுபடுகிறது: ராஜ்நாத் சிங் உறுதி
எல்லைப் பகுதிகளின் வளர்ச்சிக்கு அரசு பாடுபடுகிறது: ராஜ்நாத் சிங் உறுதி
UPDATED : டிச 07, 2025 05:58 PM
ADDED : டிச 07, 2025 04:12 PM

லே: '' லடாக் உள்ளிட்ட எல்லைப்பகுதிகள் வலிமையாக இருக்க வேண்டும். இதற்காக அப்பகுதிகள் வளர்ச்சி பெறுவதற்கு மத்திய அரசு முழு உத்வேகத்துடன் பணியாற்றி வருகிறது,'' என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
லடாக் மாநிலம் லே பகுதியில், எல்லை சாலைகள் அமைப்பு (பிஆர்ஓ) சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஐந்து ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நிறைவேறற்றப்பட்ட 125 திட்டப்பணிகளை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் துவக்கி வைத்தார். அதில் 920 மீட்டர் தூரம் கொண்ட சுரங்கப்பாதையும் அடக்கம்.
பெரிய சாதனை
இந்த விழாவில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: பிஆர்ஓவின் 125 திட்டங்கள் மற்றும் போர் நினைவு சின்னத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பதில் பெருமிதம் அடைகிறேன். நமது வீரர்கள் காட்டிய தைரியம் நமக்கு முன்மாதிரியாக உள்ளது. இன்று அர்ப்பணிக்கப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தும் நமது கதாநாயகர்களுக்கு அர்ப்பணிக்கிறோம். நாட்டிற்காக நமது ராணுவத்தின் தைரியமிக்க வீரர்களும், பிஆர்ஓ அமைப்பினரும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். எந்த சூழ்நிலையிலும், எந்த காலநிலையிலும் நீங்கள் பணியாற்றுவதால், இன்று தேசம் புதிய உயரங்களை தொட்டுள்ளது. ஒரே நேரத்தில் இவ்வளவு அதிகமான திட்டங்களை துவக்கி வைப்பது நாட்டின் வரலாற்றில் இதுவே முதல்முறையாகும். இது பிஆர்ஓவுக்கும் நமக்கும் பெரிய சாதனை.
தீர்மானம்
இந்த சாதனையானது, வளர்ந்த பாரதத்தின் தீர்மானத்திற்கான சான்றாகும். மற்றொருபுறம், எல்லை உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு அரசு மேற்கொள்ள அசைக்க முடியாத தீர்மானத்தை எடுத்துக் காட்டுகிறது. லடாக்கில் திறந்து வைக்கப்பட்ட சுரங்கப்பாதையானது, உலகின் மிகவும் கடினமான மற்றும் சவாலான பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது. இது அனைத்து பருவநிலைகளிலும் போக்குவரத்துக்கு உகந்ததாக இருக்கும்.
முழு உத்வேகம்
சமீப நாட்களாக எல்லைப்பகுதியில் பிஆர்ஓ அமைப்பினர் காட்டும் வேகமும் திறமையும் நாட்டின் வளர்ச்சிக்கு உந்துதலாக அமைந்துள்ளது. லடாக் உள்ளிட்ட எல்லை பகுதிகள், நமது தொலைத்தொடர்புகள், இணைப்புத் திட்டங்கள் ஆகியவை இன்னும் வலிமையாக இருக்க வேண்டும் என தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். எல்லை பகுதிகளின் முழுமையான வளர்ச்சிக்காக மத்திய அரசு தொடர்ந்து முழு உத்வேகத்துடன் பணியாற்றி வருகிறது. மத்திய அரசு, ஆயுதப்படைகள், பிஆர்ஓ போன்ற அமைப்புகள் மக்களுடன் நிற்கின்றன. அவர்களின் மனங்களுடன் இணைந்து பணியாற்றுகின்றன. இந்த பிணைப்பை வலுப்படுத்த வேண்டும். இதன் மூலம் வெளியில் இருந்து வரும் எதிரிகளால் இந்த உறவு பாதிக்கப்படாது.
திட்டங்களின் பலன்கள்
ஒரு நாடு வளர்ச்சி பெற பாலங்கள், சாலைகள் மற்றும் சுரங்கங்கள் ஆகியன தேவை. எல்லை பாதுகாப்பை பற்றிபேசும் போது இந்த இணைப்புகள் மிகவும் முக்கியமாக மாறிவிடுகின்றன. எல்லை பகுதியில் அமைக்கப்படும் சாலைகள் வெறும் சாலைகளாக மட்டும் இருப்பதில்லை. அவை, பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் ஆயுதப்படைகளை ஒருங்கிணைத்தல் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகியவைக்கு முக்கியமானதாக மாறிவிடுகின்றன.
இதுபோன்ற பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களால், நமது ஆயுதப்படைகளை விரைவாக ஒருங்கிணைக்க முடியும். அவர்களுக்கு தேவையான தளவாடங்களை விரைவில் கொண்டு செல்ல முடியும். மேலும், இதனால், இப்பகுதியில் சுற்றுலா வளர்ச்சி பெறுவதுடன், இங்கு வசிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகி, பொருளாதார நடவடிக்கைகள் ஊக்கம் பெறும். மேலும், வளர்ச்சி, அரசு, அமைப்பு மற்றும் ஜனநாயகம் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை வலுவடையும். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

