'வீலிங்' தடுக்க நடவடிக்கை; அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
'வீலிங்' தடுக்க நடவடிக்கை; அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
ADDED : ஜன 30, 2025 11:41 PM
பெங்களூரு; பெங்களூரில் இருசக்கர வாகனத்தில் 20 வயது வாலிபர்கள், 'டிரிபிள்ஸ்' போவதும், போலீசாருக்கு பயப்படாமல் வீலிங் செய்வதையும் கட்டுப்படுத்த அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து, மார்ச் 17க்குள் பதில் அளிக்குமாறு கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
ஷிவமொக்கா கட்டீல் அசோக் பை நினைவு கல்லுாரி சைக்காலஜி துறை பேராசிரியர் டாக்டர் அர்ச்சனா பட், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.
மனுவில், 'ஒன்பது மாதம் முதல் 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை, இரு சக்கர வாகனத்தில் அழைத்து செல்லும் போது, ஹெல்மெட் அணிய வேண்டும் என்று சட்டம் இயற்ற வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.
இம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அஞ்சாரியா, நீதிபதி அருண் ஆகியோர் அடங்கிய அமர்வு, 'குழந்தைகள் ஹெல்மெட் விஷயத்தில், தற்போதுள்ள விதிகளை அமல்படுத்துங்கள்' என்ற என்று வாய்மொழி உத்தரவு பிறப்பித்தனர்.
இதற்கு அரசு தரப்பில், 'குழந்தைகளுக்கு தனி ஹெல்மெட் தயாரிக்க அதன் உற்பத்தியாளர்களுடன் போக்குவரத்து துறை ஆலோசனை நடத்தி உள்ளது. இந்த ஹெல்மெட் தயாரிக்க, ஐந்து முதல் ஆறு மாதங்கள் அவகாசம் தேவை' என கூறப்பட்டது.
நீதிபதிகள், 'பெங்களூரில் 20 வயது வாலிபர்கள் மூன்று பேர் அமர்ந்து டிரிபிள்ஸ் போவதும், போலீசாருக்கு பயப்படாமல் வீலிங் செய்வதாலும் விபத்துகள் ஏற்படுகிறது. ஆனால் அவர்கள் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்காக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து, மார்ச் 17க்குள் பதில் தாக்கல் செய்ய வேண்டும்' என்று கூறி ஒத்திவைத்தனர்.

