'வந்தே மாதரம்' முழுமையாக இருந்திருந்தால் நாடு பிளவுபட்டிருக்காது: மத்திய அமைச்சர் அமித் ஷா பேச்சு
'வந்தே மாதரம்' முழுமையாக இருந்திருந்தால் நாடு பிளவுபட்டிருக்காது: மத்திய அமைச்சர் அமித் ஷா பேச்சு
UPDATED : டிச 10, 2025 12:25 AM
ADDED : டிச 10, 2025 12:24 AM

புதுடில்லி: ''வந்தே மாதரம் பாடல் முழுமையாக இருந்திருந்தால், நாடு பிளவுபட்டிருக்காது,'' என, ராஜ்யசபாவில், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்து உள்ளார்.
தேசிய பாடலான, 'வந்தே மாதரம்' இயற்றப்பட்டு, 150 ஆண்டுகள் நிறைவு அடைந்ததை கொண்டாடும் வகையில், பார்லி.,யில் அது தொடர்பாக சிறப்பு விவாதம் நடந்தது. லோக்சபாவில், பிரதமர் மோடி நேற்று முன்தினம் பேசினார்.
இந்நிலையில், ராஜ்யசபாவில் நேற்று, வந்தே மாதரம் பாடல் மீதான விவாதத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:
வந்தே மாதரம் பற்றிய விவாதம் தற்போது ஏன் என, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். அந்த பாடலின் உணர்வை தெரியாதவர்கள் தான் இப்படி பேசுவர். 2047க்குள், வளர்ந்த பாரதமாக நம் நாட்டை மாற்றுவதற்கு இந்த பாடல் மிகவும் அவசியம்.
மேற்கு வங்க சட்டசபை தேர்தல் காரணமாக, வந்தே மாதரம் பற்றி விவாதம் நடப்பதாகவும் குறுகிய மனமுள்ளவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதன் மூலம் நம் தேசிய பாடலை அவர்கள் குறைத்து மதிப்பிடுகின்றனர். வந்தே மாதரத்தை இயற்றிய பங்கிம் சந்திர சட்டர்ஜி வங்கத்தைச் சேர்ந்தவர் தான். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
ஆனால், வந்தே மாதரம் வங்கத்திற்கு மட்டும் என சுருக்கப்படவில்லை. நாட்டின் எல்லையில் ஒரு ராணுவ வீரரோ அல்லது நாட்டை உள்ளே இருந்து பாதுகாக்கும் ஒரு போலீஸ் அதிகாரியோ தன் உயிரை தியாகம் செய்யும் போது, அவர் எழுப்பும் ஒரே முழக்கம் வந்தே மாதரம் மட்டுமே.
வந்தே மாதரம் குறித்த விவாதம் அரசியல் உத்தி, பிரச்னைகளை திசைதிருப்பும் வழி என, காங்., கூறுகிறது. பிரச்னைகள் குறித்த விவாதங்களுக்கு நாங்கள் பயப்படுவதில்லை. பார்லி.,யை புறக்கணிக்கவில்லை. சபை நடக்க அனுமதித்தால், அனைத்து பிரச்னைகளை பற்றியும் விவாதிக்க நாங்கள் தயார்.
வந்தே மாதரம் பாடலில் குறிப்பிட்ட சில வரிகளை வேண்டுமெ ன்றே நேரு நீக்கினார். அப்போது தான் பிரச்னையே துவங்கியது. அது தான், நாட்டை பிளவுபடுத்த வழிவகுத்தது. வந்தே மாதரம் மட்டும் முழுமையாக இருந்திருந்தால், இன்று நம் நாடு பிளவு பட்டிருக்காது. இது ஏன் காங்., தலைவர்களுக்கு புரியவில்லை? இவ்வாறு அவர் பேசினார்.

