ஏணிச்சின்னத்தில் ஒரு குத்து; தென்னை மரத்தில் ஒரு குத்து; மஹா., தேர்தலில் விசித்திரம்!
ஏணிச்சின்னத்தில் ஒரு குத்து; தென்னை மரத்தில் ஒரு குத்து; மஹா., தேர்தலில் விசித்திரம்!
ADDED : நவ 25, 2024 01:41 PM

மும்பை: மஹாராஷ்டிரா, நந்தீத் லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் ஓட்டளித்த வாக்காளர்கள் 1,59, 323 பேர், சட்டசபை தேர்தலில் பா.ஜ., கூட்டணிக்கும், எம்.பி., பதவிக்கான இடைத்தேர்தலில் காங்., கூட்டணிக்கும் ஓட்டளித்துள்ளனர்.
மஹாராஷ்டிராவில், நந்தீத் லோக்சபா தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. பொதுத்தேர்தலில் இந்த தொகுதியில், காங்கிரஸ், பா.ஜ., வேட்பாளர்கள் மோதினர். இதில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மூத்த தலைவர் வசந்த்ராவ் பல்வந்த்ராவ் சவான், 5,28,894 ஓட்டுகள் பெற்று வென்றார். எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ., வேட்பாளர் பிரதாப்ராவ் கோவிந்த்ராவ் சிக்காலிகர், 4,69,452 ஓட்டுகள் பெற்று தோல்வி அடைந்தார்.
தேர்தல் முடிந்த சில மாதங்களில், வசந்த் ராவ் பல்வந்த்ராவ் சவான் காலமானார். இதையடுத்து அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தல், தற்போதைய சட்டசபை தேர்தலுடன் நடத்தப்பட்டது.
இடைத்தேர்தலில், மறைந்த பல்வந்த் ராவ் சவானின் மகன் ரவீந்திர வசந்த்ராவ் சவான், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து, பா.ஜ., சார்பில் சந்துராவ் ஹம்பார்டே போட்டியிட்டார்.
இந்த தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் ரவீந்திர சவான், 5,86,788 ஓட்டுகள் பெற்று வென்றார். பா.ஜ., வேட்பாளர், 5,85,331 ஓட்டுகள் பெற்று, 1,457 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
இதில், லோக்சபா இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வென்றாலும், அந்த தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் தோல்வியை தழுவியுள்ளனர்.
எம்.பி., தொகுதி இடைத்தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டளித்த வாக்காளர்கள், 1,59, 323 பேர், சட்டசபை தேர்தலுக்காக, பா.ஜ., கூட்டணிக்கு ஓட்டளித்துள்ளனர். அதாவது ஒரே நாளில் நடந்த தேர்தலில், ஒரு ஓட்டு பா.ஜ., கூட்டணிக்கும், இன்னொரு ஓட்டு காங்கிரஸ் கூட்டணிக்கும் செலுத்தப்பட்டுள்ளது, புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
வாக்காளர்களின் இந்த விசித்திர செயல்பாடு குறித்து ஆராய்ந்து வருவதாக, காங்கிரஸ் தலைமை செயற்குழு நிரந்தர அழைப்பாளரான குர்தீப் சிங் சப்பல் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவில், காங்கிரஸ் எம்.பி., கார்த்தியும் தன் கருத்தை தெரிவித்துள்ளார். அவர் தன் பதிவில், 'மக்கள் சட்டசபைக்கு ஒரு மாதிரியாகவும், பார்லிமென்ட் தேர்தலுக்கு வேறு மாதிரியாகவும் ஓட்டளிக்கின்றனர். இது தான் தற்போது நடந்து கொண்டு இருக்கிறது. லோக்சபா தேர்தலின்போது, திருப்பதி எம்.பி., தொகுதியில் இப்படி தான் நடந்தது.
''கடந்த 2019ல் சிவகங்கை லோக்சபா தொகுதியில் நான் போட்டியிட்டபோதும் இதேபோல் நடந்தது. மானாமதுரை சட்டசபை தொகுதியில், என்னை எதிர்த்து நின்ற வேட்பாளரை காட்டிலும் எனக்கு அதிக ஓட்டுகள் கிடைத்தன. ஆனால், கூட்டணி கட்சி சார்பில் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் தோற்றுப்போனார்,'' என்று தெரிவித்துள்ளார்.

