இன்று 1650 விமான சேவை; இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு
இன்று 1650 விமான சேவை; இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு
ADDED : டிச 07, 2025 06:22 PM

புதுடில்லி: நாடு முழுவதும் தினசரி இயக்கப்பட வேண்டிய 2,300 விமானங்களுக்கு பதிலாக, இன்று 1650 விமானங்களே இயக்கப்பட்டதாக இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது. நேற்று இருந்ததை காட்டிலும், இன்று டிச.,7ல் சேவை எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளது.
ஆமதாபாத் விமான விபத்தின் எதிரொலியாக விமானிகளின் பணி நேர விதிகளில் அண்மையில் மத்திய அரசு மாற்றத்தை அறிவித்தது. அதற்கு தகுந்தபடி, தனது விமானிகளின் பணிநேர மாற்றங்களை சரியாக திட்டமிட்டு இண்டிகோ நிறுவனம் செயல்படுத்தவில்லை.
இதன் காரணமாக, புதிய பணி விதிகள் அமலுக்கு வந்ததும் பைலட்டுகள் பற்றாக்குறை ஏற்பட்டது; நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவைகள் ஸ்தம்பித்தன. தினமும் நுாற்றுக்கணக்கான இண்டிகோ விமானங்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது. ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும் இதனால் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். கிட்டத்தட்ட ஒரு வாரமாக நீடிக்கும் இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் நடவடிக்கையில் மத்திய அரசும் தீவிரமாக இறங்கி உள்ளது.
இந் நிலையில், இன்றும் அடுத்தடுத்து விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. முக்கிய நகரங்களில் ரத்து செய்யப்பட்ட விமான சேவைகளின் எண்ணிக்கை;
ஹைதராபாத் - 115 விமானங்கள்
மும்பை - 112 விமானங்கள்
புதுடில்லி - 109 விமானங்கள்
கோல்கட்டா - 76 விமானங்கள்
ஆமதாபாத் - 20 விமானங்கள்
புனே - 25 விமானங்கள்
அகர்தலா - 6 விமானங்கள்
திருச்சி - 11 விமானங்கள்
வழக்கமாக நாள்தோறும் சராசரியாக இயக்கப்பட வேண்டிய 2300 விமானங்களில் 1650 விமானங்களை மட்டுமே இயக்கி வருவதாக இண்டிகோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நேற்றைய தினம் 1500 விமான சேவைகள் இருந்த நிலையில் தற்போது அது அதிகரித்து 1650 ஆக உள்ளதாக இண்டிகோ கூறியுள்ளது.

