நாட்டின் வளர்ச்சியில் ஏற்பட்ட தொய்வுக்கு ஹிந்துக்களின் வாழ்க்கை முறை காரணமா? பிரதமர் மோடி விமர்சனம்
நாட்டின் வளர்ச்சியில் ஏற்பட்ட தொய்வுக்கு ஹிந்துக்களின் வாழ்க்கை முறை காரணமா? பிரதமர் மோடி விமர்சனம்
ADDED : டிச 07, 2025 02:59 AM

புதுடில்லி: “நம் நாட்டின் முந்தைய கால வளர்ச்சியில் தொய்வு ஏற்பட்டதற்கு, ஹிந்துக்களின் வாழ்க்கை முறை காரணம் எனக்கூறி அவதுாறு பரப்பப்பட்டன,” என, பிரதமர் மோடி விமர்சித்தார்.
டில்லியில், 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' நாளிதழின் தலைமைத்துவ உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி நேற்று பங்கேற்று பேசியதாவது:
முந்தைய ஆட்சியா ளர்கள், நம் நாட்டு மக்கள் மீது நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. ஆனால் மத்திய அரசு மக்கள் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
அரசின் பல சேவைகளைப் பெற, ஒரு நபரின் சுயகையொப்பமே போதுமான ஆதாரமாக கருதப்படுகிறது. இதன்மூலம், குடிமக்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்க செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நம் நாட்டில் நிலவும் காலனித்துவ மனநிலையை நாம் அகற்றுவது அவசியம்; அடுத்த 10 ஆண்டுகளுக்கு குடிமக்களை தொலைநோக்கு பார்வையுடன் முன்னோக்கி அழைத்துச் செல்ல விரும்புகிறேன்.
வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், ஈவுத்தொகை வாயிலாக கோரப்படாத நிதியாக, 1.04 லட்சம் கோடி ரூபாய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடின உழைப்பு மூலம் குடிமக்கள் ஈட்டிய வருவாயை, மீண்டும் அவர்களுக்கு சென்றடைய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
வரும் 2035ம் ஆண்டுக் குள் மக்களிடையே நிலவும் காலனித்துவ மனநிலையை அகற்றி, நாம் மற்றவர்களின் கால்தடங்களை பின்பற்றாமல், நம் பாதையில் தடம் பதிக்க வேண்டும். நம் முன் உள்ள எல்லா சவால்களையும் முறியடித்து, முன்னேற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

