ADDED : ஏப் 28, 2024 04:39 PM

புதுடில்லி: லோக்சபா முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்தல் முடிந்த நிலையில் போட்டியிட்ட வேட்பாளர்களில் பெண் வேட்பாளர்கள் 8 சதவீதம் பேர் தான் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
லோக்சபாவுக்கு முதல் கட்டமாக ஏப்.,19 ம் தேதியும்,2ம் கட்டமாக ஏப்.,26ம் தேதியும் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் போட்டியிட்ட 2,823 வேட்பாளர்களில் 235 பேர் மட்டுமே பெண்கள். முதல் கட்ட தேர்தலில் 135 பேரும், 2ம் கட்ட தேர்தலில் 100 பேர் என 235 பெண்கள் போட்டியிட்டனர்.
முதல்கட்ட தேர்தலில் போட்டியிட்ட 135 பெண்களில், அதிகபட்சம் 76 பேர் தமிழகத்தில் போட்டியிட்டனர். இருப்பினும், தமிழகத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களில் இது வெறும் 8 சதவீதம் மட்டுமே.
அதேபோல் 2ம் கட்ட தேர்தலில் 100 பெண் வேட்பாளர்களில், அதிகபட்சமாக கேரளாவில் 24 பெண் வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
இந்த இரு கட்ட தேர்தலில், அதிக பெண்களை களமிறக்கியதில் மத்தியில் ஆளும் பா.ஜ., முதலிடத்தில் உள்ளது. அக்கட்சி சார்பில் 69 பேர் போட்டியிட்டனர். இதற்கு அடுத்த இடத்தில் காங்கிரஸ் சார்பில் 44 பெண்கள் போட்டியிட்டனர்.

