கண்டன ஆர்ப்பாட்டத்தில் கன்னத்தில் அறை: தொண்டரிடம் மம்தா ஆவேசம்
கண்டன ஆர்ப்பாட்டத்தில் கன்னத்தில் அறை: தொண்டரிடம் மம்தா ஆவேசம்
ADDED : ஜூலை 08, 2026 09:34 PM

கோல்கட்டா: திரிணமுல் காங்கிரஸ் நடத்திய போராட்டத்தின் தொண்டரை மம்தா பானர்ஜி அனைவர் முன்னிலையில் கன்னத்தில் அறைந்தார்.
பர்பூரி பகுதியில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்து கோல்கட்டாவில் திரிணமுல் காங்கிரசின் இளைஞரணி கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்து இருந்தது.
அறிவித்தபடி ஆர்ப்பாட்டமானது, கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி இல்லம் அருகே நடைபெற்றது. போராட்டத்தின் போது மம்தாவும் அங்கே இருந்தார்.
போராட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பலர் படுகாயம் அடைந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் மம்தா ஈடுபட்ட போது, அங்கே இருந்த தொண்டர் ஒருவர், அங்குள்ளவர்கள் அவரை நெருங்கவிடாமல் தடுத்துக் கொண்டே இருந்தார்.
இதை கண்டு கோபம் அடைந்த மம்தா, தொண்டரின் கன்னத்தில் பலமாக அறைந்தார். இந்த காட்சியானது, போராட்டத்தை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த அனைவரின் கேமராக்களிலும் பதிவானது.
இந்த வீடியோவை பாஜ செய்தி தொடர்பாளர் பிரதீப் பண்டாரி தமது எக்ஸ் தள பதிவில் வெளியிட்டு உள்ளார். அவர் கூறியிருப்பதாவது;
தேர்தல் தோல்விக்கு பின்னர் அவர் கட்டுப்பாட்டை இழந்து நடந்து கொண்டுள்ளார். சொந்த கட்சித் தொண்டரையே அடித்துள்ளார்.
இவ்வாறு பிரதீப் பண்டாரி கூறியுள்ளார்.
