ADDED : டிச 10, 2025 12:39 AM

சத்னா: மத்திய பிரதேசத்தில், கஞ்சா கடத்தியதாக மாநில அமைச்சர் பிரதிமா பக்ரியின் தம்பியை போலீசார் கைது செய்தனர்.
ம.பி.,யில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதித்துறை இணையமைச்சராக இருப்பவர் பிரதிமா பக்ரி.
இந்நிலையில், இங்குள்ள சத்னா மாவட்டத்தின் மரோஹாவில் பங்கஜ் சிங் பாஹல் என்பவர் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக ராம்பூர் பகேலன் பகுதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் அங்கு சென்ற போலீசார், பாஹலின் வீட்டில் உள்ள தகர கொட்டகையில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கிருந்த சாக்கு மூட்டையில் பதுக்கி வைத்திருந்த, 46 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு, 9.22 லட்சம் ரூபாய்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மாநில அமைச்சர் பிரதிமா பக்ரியின் தம்பி அனில் பக்ரி மற்றும் அமைச்சரின் மைத்துனர் சைலேந்திர சிங் ஆகியோர் கஞ்சா வழங்கியதாக பாஹல் தெரிவித்தார்.
இதையடுத்து அனில் பக்ரியை கைது செய்த போலீசார், கஞ்சா சப்ளைக்கு பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். அனில் பக்ரி மீது போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
முன்னதாக கடந்த 3ம் தேதி, அமைச்சரின் மைத்துனர் சைலேந்திர சிங்கை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, 10.4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கஞ்சா எங்கிருந்து கடத்தப்படுகிறது, அது யாருக்கு விற்பனை செய்யப்படுகிறது என்பதை அறிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

