தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/குடும்பத்தை வழிநடத்தும் பெண்களுக்கு மாத சம்பளம் ரூ.30,000!: விபத்து காப்பீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

குடும்பத்தை வழிநடத்தும் பெண்களுக்கு மாத சம்பளம் ரூ.30,000!: விபத்து காப்பீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

குடும்பத்தை வழிநடத்தும் பெண்களுக்கு மாத சம்பளம் ரூ.30,000!: விபத்து காப்பீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

9


ADDED : ஜூன் 12, 2026 01:27 AM

Follow on GoogleFavourite on Google

9

ADDED : ஜூன் 12, 2026 01:27 AM


9
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: 'குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களை வெறும் இல்லத்தரசிகள் என கருதுவது, அவர்களின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடுவதாகும். உண்மையிலேயே அவர்கள் தேசத்தை கட்டி எழுப்புபவர்கள். சாலை விபத்தில், ஒரு வீட்டின் இல்லத்தரசி உயிரிழக்க நேர்ந்தால், மாதம் 30,000 ரூபாய் வருவாய் ஈட்டுவதற்கு சமமானவர் என கருதி, அதற்கேற்ற வகையில் இழப்பீடு வழங்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 2001, நவ., 25 அன்று நிகழ்ந்த சாலை விபத்தில், பெண் ஒருவர் உயிரிழந்தார். வாகன விபத்து தீர்ப்பாயத்தை அவரது கணவரும், மூன்று குழந்தைகளும் அணுகினர். விசாரணையின் இறுதியில், 2.42 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.

இதை ஏற்க மறுத்த கணவர், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தை நாடினார். இழப்பீட்டு தொகையை 8.43 லட்சமாக உயர்த்தி, 7.5 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.

குறைவான இழப்பீடு


சாலை விபத்துகளில் இல்லத்தரசிகள் உயிரிழக்கும் போது, அவர்களுக்கு பொருளாதார ரீதியாக நிலையான வருமானம் இல்லை என்ற காரணத்தைக் காட்டி, குறைவான இழப்பீடு வழங்கப்படும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையிலேயே பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது.

ஆனால், இந்த கணக்கீடுகள் தவறானவை என கூறி, உயிரிழந்த அந்த பெண்ணின் கணவர், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். மோட்டார் வாகன சட்டத்தின்படி இவ்வழக்கு தொடர்பான விசாரணை நடந்து வந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் கோடீஸ்வர் சிங் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது.

அதன் விபரம்:

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களை வெறும் இல்லத்தரசிகள் என அழைத்து, அவர்களின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடக் கூடாது. ஏனெனில், அவர்கள் இல்லத் தரசிகள் மட்டுமல்ல; உண்மையில் தேசத்தை கட்டி எழுப்புபவர்கள்.

இல்லத்தரசிகளின் வீட்டு வேலைகளும், குடும்பத்தினருக்கு அவர்கள் வழங்கும் அரவணைப்பும் மறுக்க முடியாத பொருளாதார மதிப்பு கொண்டவை. வீட்டை நிர்வகிக்கும் ஒரு பெண்ணின் உழைப்பு, நான்கு சுவர்களுக்குள் முடிந்து விடுவதில்லை.

வருங்கால தலைமுறையினரை வளர்த்து எடுப்பதிலும், மனித வளத்தை மேம்படுத்துவதிலும் அவர்களின் பங்கு அளப்பரியது. எனவே, அவர்களை வெறும் இல்லத்தரசி என அழைப்பதை விட, தேசத்தை உருவாக்குபவர்கள் என சொல்வது தான் பொருத்தமானதாக இருக்கும்.

குடும்ப வருமானத்தை ஈட்டும் நபர்கள் உண்மையில் இந்த இல்லத்தரசிகளையே சார்ந்துள்ளனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்த யதார்த்தம் சமூகத்தில் இன்னும் தகுந்த அங்கீகாரத்தை பெறவில்லை.

நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில், இல்லத்தரசிகளின் ஊதியமில்லா வீட்டுப் பராமரிப்பு உழைப்பு மட்டுமே, 15 முதல் 17 சதவீதம் வரை பங்களிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கத் துடிக்கும் இந்தியாவின் மனித மூலதனத்தை உருவாக்குவதில், பெண்களின் பங்கை வெறும் பணத்தை வைத்து மட்டும் அளவிட முடியாது.

ஒரு பெண் வீட்டில் சமையல்காரராகவோ, பணிப் பெண்ணாகவோ பணியாற்றும்போது அவருக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. அவர் செய்யும் சேவை, ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் கணக்கெடுக்கப்படுகிறது.

அதுவே, அந்த பெண் வீட்டு உரிமையாளரை திருமணம் செய்து, சம்பளம் இல்லாமல், அதே வேலையை செய்ய நேர்ந்தால், நாட்டின் பொருளாதார கணக்கெடுப்பில் அவரது பங்களிப்பு பூஜ்ஜியமாகி விடுகிறது.

இதையே பொருளாதார மேதை சர் செசில் பிகோ, தேசிய வருவாய் குறைந்துவிடுகிறது என முரணாக கூறியுள்ளார்.

கவலை


காலையில் உணவளித்து, குழந்தைகளையும், வேலைக்கு செல்பவர்களையும் வீடுகளில் இருந்து பெண்கள் அனுப்பி வைப்பதால்தான், வெளி உலகில் உற்பத்தித் திறன் சாத்தியமாகிறது. எனவே, பெண்களின் வீட்டு உழைப்புதான், நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார இயந்திரத்திற்கும் எரிபொருளாக விளங்குகிறது.

எனவே, விபத்து இழப்பீடுகளை கணக்கிடும் போது, இனி இவர்களின் உழைப்பிற்கு மாதந்தோறும் குறைந்தபட்சம் 30,000 ரூபாய் என மதிப்பீடு செய்து வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், வாகன விபத்து தொடர்பான வழக்கு விசாரணைகள் தாமதமாக நடத்தி முடிப்பது குறித்தும் உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்தது. இது போன்ற வழக்குகளை இனி ஓராண்டுக்குள் நடத்தி முடிக்கவும் அறிவுறுத்தியது.

இல்லத்தரசிகளின் கண்ணுக்கு தெரியாத உழைப்பை, தேச வளர்ச்சிக்கான உழைப்பு என உச்ச நீதிமன்றம் அங்கீகரித்து வழங்கிய இந்த தீர்ப்பு, பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us