மக்கள் பணத்தை கொண்டு பாபர் மசூதியை கட்ட முயன்றவர் நேரு; அமைச்சர் ராஜ்நாத் சிங்
மக்கள் பணத்தை கொண்டு பாபர் மசூதியை கட்ட முயன்றவர் நேரு; அமைச்சர் ராஜ்நாத் சிங்
ADDED : டிச 02, 2025 08:29 PM

வதோதரா: மக்கள் பணத்தைக் கொண்டு பாபர் மசூதியை கட்ட முன்னாள் பிரதமர் நேரு விரும்பினார். ஆனால் அதை சர்தார் வல்லபாய் படேல் முறியடித்தார் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
சர்தார் வல்லபாய் படேல் 150வது பிறந்த நாளை நினைவு கூரும் வகையில் ஒற்றுமை அணிவகுப்பு நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக வதோதரா அருகே உள்ள சாத்லி கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கூட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது;
முன்னாள் பிரதமர் நேரு மக்களின் பணத்தை பயன்படுத்தி அயோத்தியில் பாபர் மசூதியை கட்ட விரும்பினார். ஆனால் அவரின் திட்டம் வெற்றி பெற சர்தார் வல்லபாய் படேல் அனுமதிக்கவில்லை.
படேல் பிரதமராக வந்திருக்கலாம். ஆனால் அவர் தன் வாழ்க்கையில் எந்த பதவிக்கும் ஆசைப்பட்டது இல்லை. காந்தியின் ஆலோசனையின் பேரில் படேல் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். அதன் பின்னர் தான் 1946ல் நேரு காங்கிரஸ் தலைவரானார்.
அப்போது காங்கிரசில் பெரும்பான்மையோர் படேலை முன் மொழிந்தனர். படேல் மறைவுக்கு பின், அவருக்கு நினைவுச் சின்னம் கட்ட மக்களால் சேகரிக்கப்பட்ட நிதியை கிணறுகள், சாலைகள் அமைக்க பயன்படுத்தலாம். அவர் ஒரு விவசாயிகளின் தலைவர் என்று நேரு காரணம் கூறினார்.
இதை கட்டுவது அரசின் பொறுப்பு. நினைவு சின்னம் கட்டுவதற்கான நிதியை பயன்படுத்த வேண்டும் என்ற பரிந்துரை எவ்வளவு அபத்தமானது. நேரு தனக்குதானே பாரத ரத்னா விருது வழங்கிக் கொண்டார். ஆனால் ஏன் படேலுக்கு அது வழங்கப்படவில்லை?
வரலாற்றில் ஒளிரும் நட்சத்திரமாக படேல் புகழை நிலைநிறுத்தியதில் பிரதமர் மோடியின் பங்கு முக்கியமானது. சிலர் படேல் புகழை மறைக்கவும், அழிக்கவும் முயன்றனர். ஆனால் பாஜ ஆட்சியில் இருக்கும் வரை அவர்களின் எண்ணம் ஈடேறாது.
இவ்வாறு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.

