பார்லிமென்டுக்கு நாய்க்குட்டியுடன் வந்த காங் எம்பிக்கு ராகுல் ஆதரவு
பார்லிமென்டுக்கு நாய்க்குட்டியுடன் வந்த காங் எம்பிக்கு ராகுல் ஆதரவு
ADDED : டிச 02, 2025 07:38 PM

புதுடில்லி: காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்பியான ரேணுகா சவுத்ரி பார்லிமென்டுக்கு நேற்று காரில் நாய்க்குட்டி ஒன்றை அழைத்து வந்தது சர்ச்சையான நிலையில், அவருக்கு லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் ஆதரவு தெரிவித்துள்ளார்.
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று துவங்கி நடந்து வருகிறது. முதல் நாளான நேற்று, காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்பியான ரேணுகா சவுத்ரி பார்லிமென்டுக்கு வந்த போது நாய்க்குட்டி ஒன்றை உடன் அழைத்து வந்தார். பின்னர் அதை காரில் வீட்டுக்கு அனுப்பினர். ரேணுகா சவுத்ரியின் இந்த செயல் பார்லியையும் எம்பிக்களையும் அவமதிப்பதாக பாஜவினர் குற்றம்சாட்டினர். இதற்கு பதிலளித்த ரோணுகா சவுத்ரி கூறியதாவது: இதில் என்ன மரபு மீறப்பட்டது. தெருநாய்களை கொண்டு வரக்கடாது என சட்டம் ஏதாவது இருக்கிறதா?
பார்லி வரும் வழியில் விபத்து நடந்த இடத்தில் இந்த நாய்க்குட்டியைப் பார்த்தேன். அடிபட்டு விடுமோ என்ற அச்சத்தில் அதை மீட்டு என் காருக்குள் வைத்து பார்லி., அழைத்து வந்தேன். பின் அதை வீட்டுக்கு அனுப்பி விட்டேன் என்றார்.
ரேணுா சவுத்ரியின் இந்த செயல் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்பி ராகுல் பார்லி வளாகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: நாய்கள் குறித்த பிரச்னைதான் இன்று முக்கிய விவாதமாக இருக்கும் என நான் நினைக்கிறேன். அந்த நாய் என்ன செய்தது. இங்கு நாய் அனுமதிக்கப்படவில்லையா? அது உள்ளே அனுமதிக்கப்படுகிறது. ஒரு வேளை செல்லப்பிராணிகள் இங்கு அனுமதிக்கப்படாமல் இருக்கலாம். இந்த நாட்களில் இந்தியா விவாதிக்கும் முக்கியமான விஷயமாக இது தான் இருக்கும் என நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

