ADDED : ஜன 30, 2025 11:17 PM
விக்ரம் நகர்:டில்லியில் உள்ள பஞ்சாப் முதல்வரின் இல்லத்தில் தேர்தல் ஆணையக்குழு சோதனை நடத்தியதாக ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியது.
பஞ்சாப் பவன் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் மதுபானம், பணம் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் விளம்பரப் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து டில்லி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், டில்லியில் உள்ள பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் இல்லமான கபூர்தலாவில் பணப்பட்டுவாடா நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து தேர்தல் ஆணையக் குழுவினர் அங்கு நேற்று விரைந்து சென்று சோதனை நடத்தி வருகின்றனர்.
கோபர்னிகஸ் மார்க்கில் உள்ள கபூர்தலா இல்லத்திற்கு வெளியே உள்ள ஒரு அதிகாரி செய்தியாளர்களிடம் கூறுகையில், “இங்கிருந்து பணம் வினியோகிக்கப்படுவதாக புகார் வந்துள்ளது. சோதனை நடத்த குழு அனுமதிக்காக காத்திருக்கிறது,” என்றார்.
தேர்தல் ஆணைய அதிகாரிகள் மற்றும் பறக்கும் படை உறுப்பினர்களுடன் டில்லி காவல்துறையினர் பாதுகாப்புக்காக வந்ததாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக தன்னுடைய 'எக்ஸ்' பக்கத்தில் முதல்வர் ஆதிஷி, 'தேர்தல் ஆணைய சோதனையின் பின்னணியில் பா.ஜ., உள்ளது. பா.ஜ.,வினர் பணம், காலணிகள், படுக்கை விரிப்புகளை வெளிப்படையாக வினியோகித்து வருகின்றனர். அதை காவல்துறையினரால் பார்க்க முடியவில்லை. ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரின் வீட்டை சோதனை செய்வதற்காக முற்றுகையிட்டுள்ளனர்' என பதிவிட்டுள்ளார்.
பஞ்சாப் அரசு ஸ்டிக்கர் மற்றும் அம்மாநில பதிவு எண் கொண்ட ஒரு வாகனத்தை டில்லி காவல்துறையினர் பறிமுதல் செய்த சம்பத்திற்கு பிறகு இந்த சோதனை நடப்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் ஆணைய சோதனையை ஆம் ஆத்மி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கண்டித்துள்ளது.

