டிச.,4ல் இந்தியா வருகிறார் புடின்: டில்லியில் உச்சகட்ட பாதுகாப்பு
டிச.,4ல் இந்தியா வருகிறார் புடின்: டில்லியில் உச்சகட்ட பாதுகாப்பு
ADDED : டிச 02, 2025 09:49 PM

புதுடில்லி: ரஷ்யா அதிபர் புடின் நாளை மறுநாள்( டிச.,4) டில்லி வருகிறார். இதனையடுத்து டில்லியில் உச்சகட்ட பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.
ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் நாளை மறுநாள்( டிச.,4 ) இரு நாள் பயணமாக டில்லி வர உள்ளார். அவர் எங்கு தங்க உள்ளார், எங்கெங்கு செல்ல உள்ளார் என்பன போன்ற தகவல்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், புடினின் வருகையை முன்னிட்டு டில்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்துள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் கூறியதாவது: புடின் வந்து செல்லும் வரை கண்காணிப்பு பணியில் உள்ள அனைத்து அமைப்புகளும், உஷாராக இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். நிமிடத்துக்கு நிமிடம் நடக்கும் ஒவ்வொரு நடமாட்டமும் கண்காணிக்கப்படும். போக்குவரத்து முதல், தூய்மைப்பணி வரையில், டில்லி போலீசின் மூத்த அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
தற்போது கிடைத்த பயண திட்டத்தின்படி, அனைத்து இடங்களும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. முன்னரே தூய்மைப் பணியும் செய்யப்பட்டு விட்டது. இப்பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படும். பாதுகாப்புப் பணியில் ஸ்வாட் படையினர், பயங்கரவாத தடுப்பு குழுவினர், அதிவிரைவுப் படையினர் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். ட்ரோன் கண்காணிப்பு, சிசிடிவி கண்காணிப்பு, தொழில் நுட்ப கண்காணிப்பு அமைப்புகளும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
ரஷ்ய பாதுகாப்புப் படையினரும், புடினின் பாதுகாவலர்களும் டில்லிக்கு வந்து பாதுகாப்பை ஆய்வு செய்ய உள்ளனர். போக்குவரத்து மாற்றங்கள், கட்டுப்பாடுகள் உள்ளிட்ட அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

