UPDATED : ஜூன் 07, 2026 07:03 AM
ADDED : ஜூன் 07, 2026 02:38 AM

புதுடில்லி: அடுத்த ஆண்டு பல மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்நிலையில், கட்சியை பலப்படுத்தவும், தேர்தலில் வெற்றி பெறவும், பல அதிரடி முடிவுகளை எடுக்கவிருக்கிறார் ராகுல். மேலும், பல மாநில காங்., தலைவர்களை மாற்றவும், முடிவெடுத்து உள்ளாராம். இது தொடர்பாக, சமீபத்தில் காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச்செயலர் வேணுகோபால் மற்றும் ராகுல் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.
அடுத்தாண்டு பிப்ரவரி மற்றும் -மார்ச்சில் உ.பி., பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா என ஐந்து மாநிலங்களிலும், ஆண்டு இறுதியில் ஹிமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத்திலும் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதில் பஞ்சாபை தவிர்த்து, மற்ற மா நிலங்களில் காங்கிரசுக்கும், பா.ஜ.,விற்கு ம் நேரடி போட்டி.
இந்த ஏழு மாநிலங்களிலும், பல அதிரடி மாற்றங்கள் கட்சியில் நடைபெற உள்ளதாம். கட்சியின் மாநில தலைவர்கள் மாற்றப்படலாம். இதைத் தவிர, ஹரியானா, தமிழகம், மஹாராஷ்டிரா மற்றும் அசாம் மாநிலங்களில், கட்சிக்கு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். சமீபத்தில் வெற்றி பெற்று, ஆட்சியைப் பிடித்த கேரளாவிலும், காங்கிரசுக்கு புதிய தலைவர் அறிவிக்கப்படுவார்.
ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் 2028ல் நடக்கும். இங்கு சச்சின் பைலட் மாநில காங்., தலைவராக நியமிக்கப்படலாம் என்கின்றனர். இப்படி பெரிய அளவில், காங்கிரசில் மாற்றங்களை கொண்டு வர தயாராகி வருகிறார் ராகுல்.
