15,000 கோடி ரூபாய் கடன் மோசடி; அனில் அம்பானி மகன் மீது சி.பி.ஐ., வழக்கு
15,000 கோடி ரூபாய் கடன் மோசடி; அனில் அம்பானி மகன் மீது சி.பி.ஐ., வழக்கு
ADDED : டிச 10, 2025 12:40 AM

புதுடில்லி: 'அனில் திருபாய் அம்பானி' குழும நிறுவனங்களுக்கு எதிரான தனித்தனி வங்கி மோசடி வழக்குகளில், 14,852 கோடி ரூபாய் கடன் தொகையை திருப்பி செலுத்தாத புகாரின் கீழ், தொழிலதிபர் அனில் அம்பானியின் மகன் ஜெய் அன்மோல் மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது.
நாட்டின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி, 66. இவருக்கு சொந்தமான, 'ராகாஸ்' நிறுவனங்களுக்கு, 'யெஸ்' வங்கி 3,000 கோடி ரூபாய் கடன் வழங்கியது.
ஒரு நிறுவனத்தின் பெயரில் பெற்ற கடனை சட்டவிரோதமாக மற்ற நிறுவனங்களுக்கு மாற்றம் செய்ததாக, அனில் அம்பானி மீது குற்றச்சாட்டு எழுந்தது.
விசாரணையில், அனில் அம்பானி, 17,000 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக இரண்டு வழக்குகளை சி.பி.ஐ., பதிவு செய்தது. சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், 'ரிலையன்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட்' நிறுவனம், மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள ஆந்திர வங்கி கிளையில் தன் வர்த்தக தேவைகளுக்காக, 450 கோடி ரூபாய் கடன் பெற்றது.
இதற்கிடையே, வங்கி கணக்குகளில் தணிக்கை சோதனை மேற்கொண்டதில், 'ரிலையன்ஸ்' நிறுவனம் வாங்கிய கடன் தொகையை, வேறு நோக்கங்களுக்கு தவறாக பயன்படுத்தியது தெரியவந்தது.
இதுதவிர, வங்கிக்கு தவணைகளைச் செலுத்த தவறியதால், 2019 செப்., 30ம் தேதி அந்நிறுவனத்தை செயல்படாத சொத்தாக வகைப்படுத்தியது.
இதுதொடர்பாக, ஆந்திர வங்கி நிர்வா கம் சி.பி.ஐ.,யில் புகார் அளித்தது. அதில், கடன் தொகையை திருப்பி செலுத்துவதில் முறைகேடு செய்து வங்கிக்கு 228.06 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாக, 'ரிலையன்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட்' நிறுவனம் மீது குற்றஞ்சாட்டி யது.
இதன்படி, அந்நிறுவன இயக்குநர்களான ஜெய் அன்மோ ல், ரவீந்திர ஷரத் சுதால்கர் ஆகிய இருவர் மீதும் சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதைத்தொடர்ந்து, மும்பையில் உள்ள அனில் அம்பானியின் மகன் ஜெய் அன்மோல் மற்றும் அவரது நிறுவனங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இதில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.
இதன்படி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா உட்பட 18 வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து, 'ரிலையன்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட்' நிறுவனம், 5,572.35 கோடி ரூபாயும், பாங்க் ஆப் மஹாராஷ்டிரா உட்பட 31 வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து, 'ரிலையன்ஸ் கமர்ஷியல் பைனாஸ் லிமிடெட்' நிறுவனம், 9,280 கோடி ரூபாயும் கடன்களைப் பெற்றுள்ளது.
மொத்தம் 14,852 கோடி ரூபாய் கடன் தொகையை திருப்பி செலுத்தாதது குறித்த மோசடி புகார்களின் கீழ் தனித்தனி வழக்குகளை பதிவு செய்து சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

